
அணி மாற்றம்
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து பெரிய தவறு செய்தது. இந்திய அணியில் தவானுக்கு பதில் விஜய் ஷங்கர் அணியில் இடம் பெற்றார். துவக்க வீரராக ராகுல் களமிறங்கினார்.

அபார துவக்கம்
ரோஹித் சர்மா - ராகுல் இருவரும் அபார துவக்கம் அளித்தனர். இருவரும் முதலில் நிதானம் காட்டினாலும் பின்னர் வேகம் எடுத்தனர். அதிலும் ரோஹித் சர்மா நான்கு ஓவர்களுக்குப் பின் நேரடியாக அதிரடியில் குதித்தார்.

பலமான கூட்டணி
ராகுல் அரைசதம் கடந்து 57 ரன்கள் எடுத்து 24வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் பலமான கூட்டணி அமைக்க, பாகிஸ்தான் நிலைமை மிக மோசமாக மாறியது. இடையே, ரோஹித் சர்மாவை ரன் அவுட் ஆக்க கிடைத்த இரண்டு வாய்ப்புகளை கோட்டை விட்டது பாகிஸ்தான்.

ரோஹித் சதம்
ரோஹித் சர்மா தன் 24வது ஒருநாள் போட்டி சதம் கடந்து, 140 ரன்கள் குவித்து தவறான ஷாட் அடித்து, கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன் சேர்க்க வந்த ஹர்திக் பண்டியா 26, தோனி 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர் .

கோலி அதிர்ச்சி
பின்னர் விராட் கோலி, 48வது ஓவரில் பேட்டில் பந்து படாத நிலையிலும், தன் உணர்ந்த அதிர்வை வைத்து, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததாக எண்ணி வெளியேறினார். அம்பயர் அவர் நடக்க ஆரம்பித்த உடன் தான் அவுட் கொடுத்தார்.

இந்தியா 336 ரன்கள்
பின்னர், ரீப்ளேவில் அவர் அவுட்டே இல்லை என்பது தெரிந்தது, இதற்கிடையே, கடைசி இரு ஓவர்களை எதிர்கொண்ட ஜாதவ் 9, விஜய் ஷங்கர் 15 ரன்கள் எடுத்தனர். இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் பந்துவீச்சு
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. ஆமிர், இமாத் வாசிம் தவிர மற்ற அனைவரும் ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் கொடுத்தனர். ஹசன் அலி 9 ஓவர்களில் 84 ரன்கள் கொடுத்து பலத்த அதிர்ச்சி அளித்தார். ஆமிர் கடைசி நேரத்தில் 3 விக்கெட்கள் எடுத்தார், அதனால், பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை.

திருப்பம்
337 என்ற இமாலய இலக்கை நோக்கி சேஸிங் செய்ய தொடங்கியது பாகிஸ்தான். புவனேஸ்வர் குமார் 5வது ஓவரில் காயமடைந்து வெளியேறினார். அவருக்கு பதில் பந்து வீச வந்த விஜய் ஷங்கர் தன் முதல் பந்திலேயே இமாம் உல் ஹக் விக்கெட்டை எடுத்து இந்திய அணிக்கு திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார்.

பொறுமை காத்த இருவர்
அடுத்து பாக்கர் சமான், பாபர் ஆசாம் ஜோடி சேர்ந்து சிறப்பாக ரன் சேர்த்தனர். ஆனால், இருவரும் இலக்கை எட்ட ஓவருக்கு 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதை மறந்து விட்டது போல, சாவகாசமாக ஆடினர். பாபர் ஆசாம் 57 பந்துகளில் 48 ரன்களும், பாக்கர் சமான் 75 பந்துகளில் 62 ரன்களும் சேர்த்து குல்தீப் யாதவ் சுழலில் சிக்கினர்.

விக்கெட் வேட்டை
அடுத்து ஹர்திக் பண்டியா வேகத்தில் ஹபீஸ் 9, ஷோயப் மாலிக் 0 ரன்களுக்கு அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். கேப்டன் சர்பராஸ் அஹ்மது 12 ரன்கள் எடுத்து விஜய் ஷங்கர் பந்தில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் இழந்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போதே பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கி விட்டது.

கட்டாயம்
மழை நின்ற பின் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணிக்கு புதிய இலக்காக 302 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. 5 ஓவர்களில் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எட்ட முடியாத நிலையில், கட்டாயத்துக்காக நடந்தது போட்டி. 40 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 212 ரன்கள் எடுத்தது. இந்தியா டிஎல்எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரண்டாம் இடம்
இந்திய அணியில் குல்தீப் யாதவ்,விஜய் ஷங்கர், ஹர்திக் பண்டியா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர். பும்ரா 8 ஓவர்கள் வீசி 52 ரன்கள் கொடுத்து வியப்பு அளித்தார். இந்தியா உலகக்கோப்பை தொடரில் நான்கு போட்டிகளில் ஆடி அதில் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது இந்தியா.


Click it and Unblock the Notifications