திட்டம் போட்டு பிட்ச்சை சேதப்படுத்தினாரா ஆமிர்? போட்டியின் இடையே சர்ச்சை.. பின்னணி என்ன? #INDvsPAK
Recommended Video
மான்செஸ்டர் : பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முஹம்மது ஆமிர், இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஆமிர் பந்து வீசிய போது துவக்கத்திலேயே பிட்ச்சின் மீது ஓடினார். அவர் பிட்ச்சை சேதப்படுத்த முயன்றதாக இரண்டு அம்பயர் எச்சரித்த சம்பவமும் நடந்தது.
ஆமிர் இந்த காரியத்தை திட்டமிட்டு செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆமிர் அசத்தல்
முஹம்மது ஆமிர் பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் ஆவார். இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். அவரது வேகத்தில் எதிரணிகள் மிரண்டு வருகின்றன. இந்திய அணியின் ராகுலும் அவர் வீசிய முதல் ஓவரை மெய்டனாகத் தான் ஆடினார்.

முதல் எச்சரிக்கை
ஆமிர் போட்டியின் 3வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை அவர் வீசி முடித்த பின், பிட்ச்சின் மீது ஓடினார். உடனே அம்பயர் அவரை எச்சரித்தார். அது முதல் எச்சரிக்கை ஆகும்.

இரண்டாவது எச்சரிக்கை
அதன் பின்னும் ஆமிர் தொடர்ந்து பிட்ச்சின் மீது ஓடிக் கொண்டே இருக்க போட்டியின் 5வது ஓவரின் போது இரண்டாவது எச்சரிக்கையை பெற்றார். அவர் இன்னும் ஒரு முறை எச்சரிக்கை பெற்றால், பின்னர் அவர் இந்தப் போட்டியில் பந்துவீச தடை விதிக்கப்படும்.

காரணம் என்ன?
ஒரு முறை அம்பயர் எச்சரிக்கை விடுத்தும், ஆமிர் தொடர்ந்து இந்த செயலை செய்ய காரணம் என்ன? வேண்டுமென்றே இப்படி செய்தாரா என கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி, அதற்கான பதிலையும் கூறி இருக்கிறார்கள்.

சுழற்பந்துவீச்சாளர்கள்
பாகிஸ்தான் அணியில் இன்று திடீர் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்கி இருந்தார்கள். இந்தியா எப்போதும் இரண்டு முழு நேர சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி வரும் அணி. ஆனால், பாகிஸ்தான் திடீர் என இந்த மாற்றத்தை செய்தது. சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத இங்கிலாந்து ஆடுகளங்களில் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

மாற்ற முயற்சி செய்தாரா?
அங்கே தான் பிட்ச் சேதம் வேலை செய்யும். அதாவது, ஆமிர் பிட்ச்சை சேதப்படுத்தினால், அடுத்து வரும் சுழற் பந்துவீச்சாளர்கள் அதை பயன்படுத்தி, விக்கெட் எடுப்பார்கள். ஆனால், அம்பயர் முன்பே அவரை எச்சரித்து விட்டதால் இந்த திட்டம் பெரிதாக வேலை செய்யாது. ஆமிரை அடுத்து மத்திய ஓவர்களில் பந்து வீசிய வஹாப் ரியாசும் இதே காரியத்தை செய்தார். அவரை அம்பயர் எச்சரிக்காமல், இது பற்றி எடுத்துக் கூறினார்.


Click it and Unblock the Notifications