துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஒன்பதாவது முறையாக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான மோஷின் நக்வி இடம் கோப்பையை வாங்க மாட்டோம் என இந்திய அணி வீரர்கள் போர்க்கொடி தூக்கினர்.
இதனால் கோப்பையை வாங்காமல் இந்திய அணி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கோப்பையை எப்படி வழங்குவது என்பது குறித்து ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் துபாயில் நடந்தது. இதில் இந்திய அணிக்கு எவ்வாறு கோப்பையை வழங்குவது?

வெற்றி பெற்ற வீரர்களுக்கான மெடல் எப்போது வழங்கப்படுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது இந்தியா சார்பாக பங்கேற்று இருந்த பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கடுமையான வாதத்தை முன் வைத்திருக்கிறார். அதில் ஆசிய கோப்பையை தற்போது இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
அது மட்டும் இல்லாமல் கோப்பையை வெல்லும் அணிக்கு மட்டும்தான். அதை வைத்திருக்கும் அதிகாரம் இருப்பதால் ஆசிய கோப்பையை தங்களிடம் வழங்க வேண்டும் என்று வாதத்தை முன் வைத்தார். அதற்கு மோசின் நக்வி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ராஜீவ் சுக்லா, ஆசிய கோப்பை ஒன்றும் உங்களுடைய சொத்து அல்ல என்று கடுமையாக பேசியிருக்கிறார்.
இதை அடுத்து இந்த கூட்டம் முடிவு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் வரும் வியாழக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் எதிராக மோத உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடர் அகமதாபாத்தில் தொடங்குகிறது. ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற கில், குல்திப் யாதவ், பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் தான் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.
ஒருவேளை கோப்பை வழங்கப்பட்டால் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மற்ற வீரர்களின் வரவழைத்து பிசிசிஐ சார்பாக ஒரு விழா நடத்தி கோப்பையை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.