துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், வேகப்பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியாவுக்குப் அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் பதிலாக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதலாக பேட்ஸ்மேனான ரிங்கு சிங்கை அணியில் சேர்த்து இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அதிர்ச்சி அளித்தார். "என்ன நடந்தாலும் சரி, நீண்ட பேட்டிங் வரிசைதான் (Batting Depth) முக்கியம்," என்பதில் அவர் மிகவும் பிடிவாதமாக இருந்து இந்த முடிவை எடுத்தார். இது ஒரு தரப்பு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா முதலில் பந்து வீசியது. இந்த ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக அவர் இந்த முக்கியமான இறுதிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் எனும் நிலையில், அவருக்கு ஈடாக வேறு ஒரு ஆல்-ரவுண்டரைத் தேர்வு செய்ய முடியாத நிலை இருந்தது. சிவம் துபேவும் வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் என்றாலும், அவர் ஏற்கனவே ஆடும் லெவனில் இடம் பிடித்து ஆடி வருகிறார். ஆனால் அவர் ஹர்திக் பாண்டியா அளவிற்குப் பவர்பிளே ஓவர்களில் பந்து வீசிய அனுபவம் இல்லாதவர்.
எனவே, நிச்சயம் இந்திய அணி முக்கிய வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்து ஹர்திக் பாண்டியாவின் இழப்பை ஈடு கட்ட முயற்சிக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஏனெனில், அப்போதும் இந்திய அணியிடம் 7 வரிசை வரை பேட்டிங் செய்ய வீரர்கள் இருப்பார்கள். ஆறாவது மற்றும் ஏழாவது வரிசையில் சிவம் துபே மற்றும் அக்சர் படேல் என இரண்டு ஆல்-ரவுண்டர்கள் இருப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது.
ஆனால், அதிர்ச்சிகரமாக எட்டு பேட்ஸ்மேன்கள் தான் வேண்டும் என வீம்பாக இருந்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை விட்டுவிட்டு, அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரிங்கு சிங்கைத் தேர்வு செய்தார்.
இந்தத் திடீர் அணித் தேர்வு ஒருபுறம் இருக்க, மறுபுறம் பவர்பிளேயில் முதல் ஓவரை சிவம் துபேவை வீசவைத்து இறுதிப் போட்டியில் புதிய முயற்சியும் நடந்தது. அது வெற்றியும் பெற்றது என்பதுதான் இங்கே வியப்பை ஏற்படுத்தியது.
பவர்பிளே ஓவர்களில் இரண்டு ஓவர்களை வீசிய சிவம் துபே, அதில் சிறப்பாகச் செயல்பட்டு இரண்டு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதன் பிறகு 11வது ஓவரை வீசியபோது 11 ரன்களை விட்டுக் கொடுத்தார். இந்தத் திட்டத்தால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு எதுவும் ஏற்படவில்லை. எனினும், கௌதம் கம்பீர் பேட்டிங் வரிசைக்கு முக்கியத்துவம் அளித்தது அனைவரையும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
அதன் பிறகு இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் போட்டியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பாகிஸ்தான் துவக்க வீரர்களை வருண் சக்கரவர்த்தி வெளியற்றினார். அதன் பின் அக்சர் பட்டேல் 2 விக்கெட்களை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை சாய்த்தார். அதிலும் 17 ஓவரில் மட்டுமே 3 விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் சோலியை முடித்தார். பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. கம்பீரின் திட்டம் வெற்றியும் பெற்றது.