துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியர்களுடன் பேச மாட்டோம் என்று ரவி சாஸ்திரியை பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா புறக்கணித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மூன்றாவது முறையாக பலப் பரீட்சை நடத்துகின்றன.
லீக் சுற்றில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஐசிசி விசாரணை நடத்தியதில், இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு போட்டியிலிருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தான் அணியினர் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். இந்த நிலையில் இறுதி போட்டிக்கு முன்பு இரு அணி கேப்டன்கள் வைத்து போட்டோ சூட்டும் நடத்தப்படவில்லை என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இறுதிப்போட்டியில் டாஸ் போடும்போது ரவி சாஸ்திரி தான் கேப்டன்கள் இடம் நேர்காணல் எடுக்கப் போகிறார் என தெரிந்தவுடன், பாகிஸ்தான் ஒரு வினோத கோரிக்கையை வைத்தது.
அதில், நாங்கள் இந்தியர்களுடன் பேச மாட்டோம் என்றும் இறுதிப் போட்டியில் நேர்காணல் செய்ய பாகிஸ்தான் அல்லது வேறு நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்களை நியமிங்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்திருக்கிறது. இதற்கு ஊடகத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு ரவி சாஸ்திரியை தொடர்வார் என்று கூறப்பட்டது.
இதை அடுத்து பாகிஸ்தான் அணி போர் கொடி தூக்கியதால் வேறு வழியின்றி பாகிஸ்தானை சேர்ந்த வக்கார் யூனிசை நியமித்து பாகிஸ்தான் அணி கேப்டனை நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா வக்கார் யூனிசிடம் பேசி விட்டு சென்றார்.
இந்த தொடரில் இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் ஒரே ஒரு நபர் மட்டும் தான் இரு அணி கேப்டன்களையும் நேர்காணல் செய்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் இந்த வினோத கோரிக்கையால் வக்கார் யூனிசும் களத்தில் வந்திருக்கிறார். பைனலில் ரவி சாஸ்திரியை புறக்கணித்துவிட்டு இந்தியர்களுடன் பேச மாட்டோம் என பாகிஸ்தான் வீரர்கள் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.