துபாய்: ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அடைந்த தோல்வியை ஜீரணிக்கவே முடியவில்லை என பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார். நடப்பு ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்றில் சூப்பர் 4 மற்றும் இறுதி போட்டி என தொடர்ந்து மூன்று முறை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி இருக்கிறது.
இன்றைய ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி அபாரமான தொடக்கத்தை பெற்றாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி அகா, இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நாங்கள் பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை. இதனால் தான் நாங்கள் தோல்வியை தழுவி விட்டோம். பந்துவீச்சில் நாங்கள் அனைத்தையும் கொடுத்தோம். இருப்பினும் எங்களால் வெற்றி பெற முடியவில்லைம் ஒரே அணியில் இரண்டு வித்தியாசமான கதைகள் போல் ஆகிவிட்டது. பேட்டியில் சரியாக சிங்கிள்ஸ் எடுத்து விளையாட முடியவில்லை.
நாங்கள் ஒரே நேரத்தில் அதிக விக்கெட் இழந்து விட்டோம். இதனால் தான் நாங்கள் எதிர்பார்த்த இலக்கை எங்களால் தொட முடியவில்லை. எங்கள் அணியில் உள்ள பேட்டிங் பிரச்சனையை நாங்கள் விரைவில் தீர்த்துக் கொள்வோம் என்று நம்புகிறேன். இந்திய வீரர்கள் அபாரமாக பந்து வீசினார்கள். 6 ஓவர்களில் 63 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போதும் கூட நாங்கள் போட்டியில் தான் இருந்தோம் என்று நம்பினேன்.
எங்கள் அணி வீரர்கள் நன்றாக செயல்பட்டார்கள். அதற்காக என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்கள் அணியில் இருக்கும் ஒரே பிரச்சனை பேட்டிங் மட்டும்தான். ஆசிய கோப்பை தொடரில் எங்களுடைய பயணம் மிகவும் பெருமையாக இருந்தது. நாங்கள் கடுமையாக போராடினோம். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றோம். இனிவரும் காலங்களில் எங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து ஒரு பலமான அணியாக திரும்புவோம் என்று சல்மான் அலி அகா தெரிவித்துள்ளார்