துபாய்: ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19 புள்ளி ஒரு ஓவரில் 146 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில் இந்தியாவின் ஆரம்பத்தில் பேட்டிங்கில் தடுமாறினாலும், திலக் வர்மா மற்றும் சிவம் துபேவின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா வெற்றியை நோக்கி சென்ற போது பாகிஸ்தான் அணி ஒரு மிகப்பெரிய நாடகத்தை நடத்தியது.

ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணியின் கையே ஓங்கி இருந்தது. இந்திய அணி 77 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, களத்திற்கு வந்த சிவம்துபே திலக் வர்மாவுடன் இணைந்து அட்டகாசமாக விளையாடினார். இந்த தருணத்தில் கடைசி இரண்டு ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது ஆட்டத்தின் 19 ஆவது ஓவரை வீச வந்த ஃபஹிம் அஷ்ரப் தமக்கு காயம் ஏற்பட்டு விட்டதாக கூறி களத்தில் காலை பிடித்துக் கொண்டு நாடகம் ஆடினார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணியின் மருத்துவ குழுவினர் களத்திற்கு வந்து அஷ்ரப்க்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அருகில் வந்த நடுவர் உங்களால் பந்து வீச முடியவில்லை என்றால் களத்தை விட்டு சென்றுவிடுங்கள்.
ஆட்டத்தில் நேரத்தை கடத்தாதீர்கள் என்று கூறினார். ஆனால் அஷ்ரப் நான் பந்து வீசுவேன் என்று அடம் பிடித்ததால் அவர்களுடைய காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை அடுத்து ஐந்து நிமிட தாமதத்திற்கு பின் பஹிம் அஷ்ரப் 19-வது ஓவரின் முதல் பந்தை வீசினார். இந்தியா தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த நிலையில் அவர்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காக பாகிஸ்தான் வீரர்கள் இந்த நாடகத்தை ஆடினர்.
அதற்கு தகுந்தார் போல் சிவம் துபே அந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். எனினும் அதன் பின் திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். 2024 டி20 உலக கோப்பை போட்டியின் போது தென்னாப்பிரிக்கா வீரர்கள் இப்படித்தான் அபாரமாக விளையாடிய நிலையில் ரிஷப் பன்ட் காயம் ஏற்பட்டு விட்டதாக கூறி ஆட்டத்தை தாமதப்படுத்தினார். இந்தியா செய்த திட்டத்தை தற்போது இந்தியாவுக்கு எதிராகவே பாகிஸ்தான் செய்ய முயற்சித்து படுதோல்வியை தழுவி இருப்பதாக கூறி ரசிகர்கள் கிண்டல் அடித்துள்ளனர்.