ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடும் அழுத்தம் தமக்கு ஏற்பட்டதாகவும், எனினும் நாட்டுக்காக பொறுத்துக் கொண்டு விளையாடியதாகவும் திலக் வர்மா கூறியுள்ளார். பாகிஸ்தான அணி 147 ரன்களை தான் வெற்றி இலக்காக நிர்ணித்திருந்தது.
ஆனால் திலக் வர்மா பேட்டிங் செய்ய வருவதற்குள் இந்தியா 10 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சுப்மன் கில் அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 10 ரன்களில் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அதன் பின் சஞ்சு சாம்சன், சிவம் துபே ஆகியோருடன் பாட்னர்ஷிப் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு திலக் வர்மா முக்கிய காரணமாக இருந்தார். 53 பந்துகளை எதிர்கொண்டு 63 ரன்களை அவர் சேர்த்தார்.
இதில் நான்கு சிக்ஸர்களும், மூன்று பவுண்டர்களும் அடங்கும். இது குறித்து ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய திலக் வர்மா, இறுதிப்போட்டி கடும் அழுத்தத்தையும் நெருக்கடியையும் எனக்கு ஏற்படுத்தியது .ஆனால் கடைசிவரை போட்டியில் நின்று ஆட்டத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்று விளையாடினேன்.
பாகிஸ்தான் அணி வெற்றிக்காக ஒரு யுத்தியை பயன்படுத்தினார்கள். அவர்கள் பந்தின் வேகத்தை மாற்றி மாற்றி வீசினார்கள். ஆடுகளம் தோய்வாக இருந்ததால், அது நல்ல பலனை அவர்களுக்கு தந்தது. எனினும் நான் பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன். என் நாட்டுக்காக வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று ஒரே நோக்கத்திற்காக விளையாட்டினேன்.
நான் களத்தில் நின்ற போது சஞ்சு சாம்சன் என்னுடன் ஆடிய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதேபோன்று சிவம் துபே அடித்து ஆடிய விதம் நாட்டுக்காக மட்டுமல்ல, எனக்கும் மிகவும் உதவியாக இருந்தது. இந்த இரண்டு வீரர்களுக்கும் கண்டிப்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டு ஆக வேண்டும்.
இந்த இடத்தில் தான் நாங்கள் விளையாடுவோம் என்று கிடையாது. நாங்கள் எந்த இடத்தில் களமிறங்க சொன்னாலும், அதற்கு ஏற்றார் போல் ரன்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக பயிற்சி செய்திருக்கின்றோம். பயிற்சியாளர் கம்பீர் இதை தான் எங்களிடம் அடிக்கடி சொல்வார் அனைத்து இடத்திலும் விளையாட தயாராக இருங்கள் என்று கூறுவார்.
அதற்கு ஏற்றார் போல் நாங்கள் பயிற்சி செய்து வருகின்றோம். என்னை எந்த இடத்தில் களமிறக்கினாலும் நான் என்னுடைய அணிக்காக வெற்றியை தேடி தர முயற்சி செய்வேன். இதற்காகத்தான் நான் கடுமையாக உழைத்து வருகின்றேன். இந்த ஆடுகளம் போகப்போக மிகவும் தோய்வாக மாறி இருந்தது. இது போன்ற ஆடுகளத்தில் ஸ்வீப் ஷார்ட் மற்றும் அதிக அளவு சிங்கிள்ஸ் எடுப்பது என்பது எனக்கு உதவிகரமாக இருந்தது. இது என் வாழ்நாள் நிலை மிகவும் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. இந்த வெற்றியை ஒவ்வொரு இந்தியருக்காகவும் நான் அர்ப்பணிக்கிறேன். சக் டே இந்தியா என்று திலக் வர்மா கூறியுள்ளார்.