ஒட்டுமொத்த உலகமும் ஒரு பக்கம், என் இந்தியா ஒரு பக்கம்.. நெத்தியடி பதில் கொடுத்த வருண் சக்கரவர்த்தி
துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்குக் கோப்பை வழங்கப்படாத நிலையில், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியின் செயலைக் கிண்டலடிக்கும் வகையில், தனது பாணியில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, தற்போது பெரும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இருக்கும் மோஷின் நக்வி கையால் கோப்பையைப் பெற மறுத்ததால், அவர் கோப்பையைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால், இந்திய வீரர்கள் கோப்பை இல்லாமல், 'கற்பனையாக கோப்பையை' உயர்த்திப் பிடித்துக் கொண்டாடினர்.

வருண் சக்கரவர்த்தியின் 'கப்' கொண்டாட்டம்:
இந்த நிலையில், தனது வழக்கமான பாணியில், வருண் சக்கரவர்த்தியும் தனது கோப்பை கொண்டாட்டத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில், போட்டியின் சில புகைப்படங்களுடன், தனது ஹோட்டல் அறையில் படுக்கையில் அமர்ந்துகொண்டு, ஒரு தேநீர் கோப்பையுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதனுடன், "ஒட்டுமொத்த உலகமும் ஒரு பக்கம், என் இந்தியா ஒரு பக்கம்" என்று பதிவிட்டு மோஷின் நக்விக்கு பதிலடி கொடுத்துள்ளார். உண்மையான கோப்பை வழங்கப்படாததை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் விதமாக அவர், இந்த 'வெற்றுக் கோப்பையுடன்' பதிவிட்டுள்ளது, மோஷின் நக்வியின் செயலைக் கிண்டலடிப்பதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர். மோஷின் நக்விக்கு எதிராக பிசிசிஐ அமைப்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறி உள்ளது.
தொடரில் வருணின் பங்கு:
34 வயதான வருண் சக்கரவர்த்தி, இந்த ஆசிய கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாகப் பந்துவீசி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். அவர் இந்தத் தொடரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரும், குல்தீப் யாதவும், அக்சர் படேலும் அடங்கிய இந்தியச் சுழல் கூட்டணி, எதிரணி பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் சிம்மசொப்பனமாக விளங்கியது.


Click it and Unblock the Notifications