துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த அழுத்தம் நிறைந்த போட்டிக்கு இந்திய அணி எந்த மாதிரியான வீரர்களுடன் களமிறங்க வேண்டும் என்பது குறித்து பெரும் விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக, டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான அர்ஷ்தீப் சிங், தொடர் முழுவதும் ஆடும் லெவனில் நிரந்தர இடம் பிடிக்கத் திணறி வருகிறார்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுடன் அர்ஷ்தீப் சிங்கும் கட்டாயம் விளையாட வேண்டும் என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விளக்கி இருக்கிறார்.

சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய இர்பான் பதான், டெத் ஓவர் பந்துவீச்சில் அர்ஷ்தீப்பின் முக்கியத்துவத்தை அழுத்தமாக எடுத்துரைத்தார். "முதலில், அவர் ஒரு பனிக்கட்டியைப் போன்றவர். அழுத்தம் அதிகரிக்கும்போது, அவரே பந்தைக் கேட்டு வாங்கி வீசுவார். கடைசி கட்ட ஓவர்களில், யார்க்கர்களை வீச அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். அவரும் ஜஸ்பிரித் பும்ராவும் இணைந்து விளையாடும்போது, இரு முனைகளிலிருந்தும் யார்க்கர்களை மாறி மாறி வீசுவார்கள். அந்தத் தரத்திலான ஒரு பந்துவீச்சாளர் அவர். என்னைப் பொறுத்தவரை, நான் முதல் நாளிலிருந்தே இதைத்தான் சொல்லி வருகிறேன், அவர் ஆடும் லெவனில் இருக்க வேண்டும்," என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அர்ஷ்தீப் சிங் ஏன் தொடர்ந்து அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணத்தையும் இர்பான் பதான் விளக்கினார். "சில சூழ்நிலைகளில், உங்களுக்கு இரு முனைகளிலிருந்தும் யார்க்கர்கள் தேவைப்படும். ஆனால், இந்திய அணி நிர்வாகத்தின் சிந்தனை, நமக்கு நீண்ட பேட்டிங் வரிசை வேண்டும் என்பதாக உள்ளது. அதனால், ஆல்-ரவுண்டராக சிவம் துபே விளையாடுகிறார். அவர் விளையாடுவதால், அர்ஷ்தீப் சிங்கிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், எனது ஆடும் லெவனில் அவர் எப்போதும் இருப்பார்" என்று இர்பான் கூறினார்.
இலங்கைக்கு எதிரான கடைசி சூப்பர் 4 போட்டியில், அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் சிறப்பாகப் பந்துவீசி, சூப்பர் ஓவரிலும் வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவும், அர்ஷ்தீப் மீது தனக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். "கடந்த 2-3 ஆண்டுகளாக அவர் எங்களுக்காக இதைச் செய்து வருகிறார். அந்த சூப்பர் ஓவரை வீச அர்ஷ்தீப்பைத் தவிர வேறு யார் இருக்கிறார்? அவரது தன்னம்பிக்கையே எல்லாவற்றையும் சொல்லிவிடும்," என்று சூர்யகுமார் புகழ்ந்திருந்தார்.
கேப்டனின் நம்பிக்கையைப் பெற்றிருந்தாலும், அணி நிர்வாகத்தின் 'பேட்டிங் டெப்த்' கொள்கையால் அர்ஷ்தீப் சிங்கின் இடம் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான மாபெரும் இறுதிப் போட்டியில், இந்திய அணி நிர்வாகம் எடுக்கப் போகும் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங் டெப்த்திற்காக சிவம் துபேவைத் தொடர்ந்து அணியில் வைத்திருப்பதா அல்லது இர்பான் பதான் கூறுவது போல, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டெத் ஓவருக்காக அர்ஷ்தீப் சிங்கை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.