Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் போர்க்கொடி.. பாகிஸ்தான் அமைச்சர் கையால் ஆசிய கோப்பையை வாங்க மாட்டார் என தகவல்

துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி, தொடங்குவதற்கு முன்பே பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவருமான மோஷின் நக்வி, இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்குக் கோப்பையை வழங்க துபாய்க்கு வருகை தந்துள்ளார்.

ஆனால், இந்தியாவுக்கு எதிரான மோஷின் நக்வியின் சமீபத்திய கருத்துகள் மற்றும் செயல்பாடுகளாலும், பாகிஸ்தான் அணியுடன் கை குலுக்க மாட்டோம் என்ற இந்திய அணியின் நிலைப்பாடு ஆகிவற்றின் காரணமாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், அவர் கையால் கோப்பையை வாங்க மறுப்பார் என்று ஊகங்கள் எழுந்துள்ளன. இது, போட்டியின் முடிவில் ஒரு விரும்பத்தகாத சூழலை உருவாக்கக்கூடும்.

IND vs PAK Final Will Suryakumar Yadav Refuse to Accept the Trophy from Pakistan Board Chairman

சர்ச்சையின் பின்னணி என்ன?

மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்தாலும், அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். இந்தத் தொடர் முழுவதும், அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் என்ற தனது பொறுப்பை மீறி, பாகிஸ்தானுக்குச் சாதகமாகவே செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தத் தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசியிடம் புகார் அளித்தது. சமீபத்தில், மோஷின் நக்வி தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது போலச் சைகை செய்யும் காணொளியைப் பதிவிட்டு, இந்தியாவைக் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.

களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுஃப், சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் செய்த ஆத்திரமூட்டும் சைகைகளும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தச் சூழலில், இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவித்து வரும் மோஷின் நக்வியுடன், இந்திய வீரர்கள் மேடையைப் பகிர்ந்துகொள்ளவோ, அவர் கையால் கோப்பையைப் பெற்றுக்கொள்ளவோ விரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

பிசிசிஐயின் முடிவு என்ன?

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தொடரின் உள்வட்டார நபர் ஒருவர், "தற்போதுள்ள தகவலின்படி, அவர் (நக்வி) இன்று மாலை வருவார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் என்ற முறையில், அவர்தான் வெற்றி பெற்ற அணிக்குக் கோப்பையை வழங்குவார். பிசிசிஐ என்ன முடிவு எடுக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, லீக் போட்டிக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, மோஷின் நக்வியுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள விரும்பாததால், பரிசளிப்பு விழாவைப் புறக்கணிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. தற்போது, இறுதிப் போட்டியிலும் இதேபோன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது, கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ஆசியக் கோப்பை தொடங்கும் முன் நடந்த கேப்டன்கள் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், மோஷின் நக்வியை சந்தித்து கைகுலுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய ரசிகர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

ஒருவேளை இந்திய அணி கோப்பையை வென்றால், சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விளையாட்டுக்கும் அரசியலுக்கும் இடையேயான கோடு, இந்த ஆசிய கோப்பையில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

Story first published: Sunday, September 28, 2025, 11:00 [IST]
Other articles published on Sep 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+