கொழும்பு: 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் வர்ணனையின்போது, 'ஆசாத் காஷ்மீர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பெரும் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சனா மிர், இந்த விவகாரம் குறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார். ஆனால், அதில் நேரடியாக மன்னிப்பு கேட்காமல், தனது செயலுக்கான ஒரு விளக்கத்தை மட்டுமே அளித்து இருக்கிறார். இது இந்த விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
ஏற்கனவே, ஆண்கள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே களத்திலும், களத்திற்கு வெளியேயும் பதற்றம் நீடித்து வரும் சூழலில், சனா மிரின் இந்த வார்த்தைப் பிரயோகம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது. பாகிஸ்தான் வீராங்கனை நடாலியா பர்வைஸின் பூர்வீகம் குறித்துப் பேசும்போது, சனா மிர் 'ஆசாத் காஷ்மீர்' என்று குறிப்பிட்டதற்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சமூக வலைதளங்களில், கிரிக்கெட்டை அரசியலாக்குவதாக சனா மிர் மீது கடுமையான கண்டனங்கள் எழுந்தன. மேலும், ஐசிசி மற்றும் பிசிசிஐ இந்த விவகாரத்தில் தலையிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்தனர்.
சர்ச்சை பூதாகரமாக வெடித்த நிலையில், சனா மிர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில், "விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டு, விஷயங்கள் பெரிதுபடுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இதற்காகப் பொதுவெளியில் ஒரு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது செயலுக்கான ஆதாரத்தையும் அவர் முன்வைத்துள்ளார். "நான் எந்த அரசியல் நோக்கத்துடனும் பேசவில்லை. வர்ணனைக்குத் தயாராகும் போது, வீரர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில், நடாலியா பர்வைஸின் பிறப்பிடம் குறித்த தகவல்களைத் தேடியபோது, முன்னணி கிரிக்கெட் இணையதளமான இஎஸ்பிஎன் (ESPN) தளத்தில் 'ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர்' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத்தான் நான் மேற்கோள் காட்டினேன்," என்று கூறியுள்ள சனா மிர், அதற்கான ஸ்கிரீன்ஷாட்டையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.
பின்னர், இஎஸ்பிஎன் தளம் அந்தத் தகவலை 'பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர்' என்று மாற்றியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "வர்ணனையாளர்களாகிய நாங்கள், வீரர்களின் எழுச்சியூட்டும் கதைகளைக் கூறுவது எங்கள் வேலையின் ஒரு பகுதி. இதை அரசியலாக்க வேண்டாம். உலகளாவிய வர்ணனையில், நாங்கள் விளையாட்டையும், வீரர்களையும் மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சனா மிர் ஆதாரம் காட்டி விளக்கம் அளித்தாலும், இந்தச் சர்ச்சை அவ்வளவு எளிதில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில், அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் அதிக முக்கியத்துவத்தையும், பதற்றத்தையும் கூட்டியுள்ளது. களத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 100% வெற்றி என்ற சாதனையை வைத்துள்ள இந்திய அணியின் கையே ஓங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், களத்திற்கு வெளியே நடக்கும் இந்த வார்த்தைப் போர், போட்டி மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.