கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆனால், வெற்றி கொண்டாட்டத்திற்கு நடுவே மைதானத்தில் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் குல்தீப் யாதவிடம் கோபத்தை வெளிப்படுத்திய விதம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெறும் 8வது வெற்றியாகும்.

இந்தப் போட்டியின் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அப்போது பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி அடித்த பந்தை லாங்-ஆன் திசையில் நின்றிருந்த குல்தீப் யாதவ் கேட்ச் பிடிக்க முயன்றார். கையில் வந்து விழுந்த பந்தை அவர் தவறவிட்டதோடு, அது எல்லைக்கோட்டைத் தாண்டி சிக்ஸருக்கும் சென்றது. இதைப் பார்த்த ஹர்திக் பாண்டியா அப்போதே மைதானத்தில் தனது நிதானத்தை இழந்து குல்தீப்பை நோக்கிச் சில வார்த்தைகளைக் கூறினார்.
அந்த ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்ற பிறகும் ஹர்திக் பாண்டியாவின் கோபம் தணியவில்லை. வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளும் நேரத்தில், ஹர்திக் பாண்டியா மீண்டும் குல்தீப் யாதவிடம் சென்று ஆவேசமாகப் பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
அருகில் நின்றிருந்த இளம் வீரர் திலக் வர்மா இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். நிலைமை மோசமாவதை உணர்ந்த ரிங்கு சிங் உடனடியாகத் தலையிட்டு, ஹர்திக் பாண்டியாவைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
ஹர்திக் பாண்டியா மட்டுமல்லாமல், கேப்டன் சூர்யகுமார் யாதவும் குல்தீப் யாதவிடம் சென்று முகம் கொடுத்துப் பேசாமல் கண்டிப்புடன் நடந்து கொண்டார். அவர் கை குலுக்கிய உடன் அவரைப் பார்த்து கோபமாக பேசினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெரிய வெற்றியைப் பெற்ற பிறகும், கடைசி நேரத்தில் நடந்த ஒரு தவறுக்காகச் சக வீரரை மைதானத்திலேயே மூத்த வீரர்கள் இப்படித் திட்டியது சரியா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் இந்திய அணியின் உடை மாற்றும் அறையில் வீரர்கள் மத்தியில் சுமுகமான சூழல் நிலவுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏற்கனவே, பலமுறை குல்தீப் யாதவ் செய்த ஃபீல்டிங் தவறுக்காக ரோஹித் சர்மா, கோலி, சிராஜ் ஆகியோர் திட்டிய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தற்போது ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் ஆகியோரும் குல்தீப்பை வசைபாடி உள்ளனர். இது சரியா?