துபாய்: பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாமிற்கு "பை, பை" என சைகை காட்டி வழியனுப்பி வைத்தார் ஹர்திக் பாண்டியா. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. பாபர் அசாம் நொந்து போய் வெளியேறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் துவக்கம் அளித்து ஆடினர்.

பாபர் அசாம் சமீப காலமாக சரியாக விளையாடாத நிலையில், இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக ரன் குவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்ப 26 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார். நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவதாக ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரில் அவர் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
விக்கெட்டை வீழ்த்தியவுடன் ஹர்திக் பாண்டியா பாபர் அசாமைப் பார்த்து "பை, பை" என லேசாக சைகை காட்டினார். அந்த வீடியோ காட்சிகள் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவியது. ரசிகர்கள் பலரும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
ஏற்கனவே, பாபர் அசாம் சரியாக ரன் குவிப்பதில்லை என்ற விமர்சனம் உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 81 பந்துகளில் அரைசதம் அடித்து சோதித்து இருந்தார். தற்போது 23 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஹர்திக் பாண்டியா அவரை வழியனுப்பி வைத்து இருக்கிறார்.
மேலும் இதற்கு முன்பு இதே போல பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளார். அப்போதும் இதே போல சில சைகைகளை செய்திருக்கிறார். அந்த செய்கைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.
முன்பு 2022 டி20 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அணி வீரர் ஹைதர் அலியின் விக்கெட்டை வீழ்த்தி விட்டு ஹர்திக் பாண்டியா அவரை சிரித்துக்கொண்டே ஏளனமாக பார்த்திருப்பார். அது அப்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.
அடுத்து 2024 டி20 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அணியின் ஷதாப் கானின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு தனது தோள்களை உயர்த்தி "இதெல்லாம் ஒன்றுமே இல்லை" என்பது போல சைகை செய்திருப்பார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக மாறியது. பலரும் அதை மீம் ஆக மாற்றி பயன்படுத்தி வந்தனர். தற்போது பாபர் அசாமின் விக்கெட்டை 2025 சாம்பியன்ஸ் டிராபியில் வீழ்த்தியதுடன் அவரைப் பார்த்து "பை, பை" என சைகை செய்து இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.