துபாய்: இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டியின் 'கைகுலுக்கல் சர்ச்சை' அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வரை சென்ற நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு "நோஸ் கட்" செய்யும் வகையில் ஐசிசி ஒரு முடிவு எடுத்துள்ளது.
இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததற்கு, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), அவரை உடனடியாக ஆசிய கோப்பையிலிருந்து நீக்க வேண்டும் என்று ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளது. மேலும், தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், தொடரிலிருந்தே விலகுவோம் என்றும் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது.

இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தது, விளையாட்டு வீரர் உணர்வுக்கு எதிரானது என்று கூறி, பாகிஸ்தான் அணி மேலாளர் நவீத் சீமா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் (ACC) புகார் அளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோஷின் நக்வி, ஐசிசி-க்கு எழுதியுள்ள கடிதத்தில், "போட்டி நடுவர், ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் எம்சிசி சட்டங்களின் கீழ் உள்ள கிரிக்கெட்டின் மாண்பை மீறியுள்ளார். ஆசிய கோப்பையிலிருந்து போட்டி நடுவரை உடனடியாக நீக்க வேண்டும்" என்று கூறி இருந்தார்.
டாஸ் நிகழ்வின்போதே, இரு அணி கேப்டன்களும் கைகுலுக்கலைத் தவிர்க்க வேண்டும் என்று புயலைக் கிளப்பியது நடுவர் பைக்ராஃப்ட் தான் என்பது பாகிஸ்தானின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தாலும், அவர்களின் கோரிக்கையை ஐசிசி நிராகரிக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கைகுலுக்கல் சர்ச்சை விவகாரத்தில், நடுவர் பைக்ராஃப்டின் பங்கு மிகக் குறைவு என்றே ஐசிசி கருதுகிறது.
இது பற்றி ஐசிசி வட்டாரங்கள் கூறுவதாவது: "ஒரு அணி கேப்டன் மற்றொருவருடன் கைகுலுக்க மறுப்பதால், டாஸின்போது ஏற்படும் சங்கடத்தை தவிர்ப்பதற்காக, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிலிருந்து (ACC) வந்த ஒரு செய்தியை பைக்ராஃப்ட் இரு அணி கேப்டன்களுக்கும் தெரிவித்திருக்கலாம். ஒரு உறுப்பினர் நாட்டின் கோரிக்கைக்காக, ஒரு போட்டி அதிகாரியை மாற்றுவது தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஐசிசி-க்கு போதுமான காரணங்கள் இல்லை" என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் கேப்டன்கள் கைகுலுக்க வேண்டாம் என சொல்லுமாறு ஆண்டி பைகிராஃப்ட்டுக்கு உண்மையில் உத்தரவு இட்டது யார்? என்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. "ஐசிசி-க்கு இதில் என்ன சம்பந்தம்? போட்டிக்கு அதிகாரிகளை நியமிப்பதுடன் அவர்களின் வேலை முடிந்துவிட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் (ACC) இருந்து ஒருவர்தான், போட்டிக்கு முன்பு பைக்ராஃப்டிடம் பேசியுள்ளார். அதன் விளைவுதான் டாஸின்போது நடந்தது. பிசிபி தலைவர், அந்த உரையாடல் என்ன, அதை யார் செய்தது, ஏன் செய்தது என்பதைக் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, ஐசிசி மீது பழி போடுகிறார்" என்று இந்த விவகாரத்தைக் கண்காணிக்கும் ஒரு நபர் கூறியுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருப்பவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் ஒருவரே - அவர் மோஷின் நக்வி. இது இந்தச் சர்ச்சையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அப்படி என்றால் பாகிஸ்தானே இதை சொல்லிவிட்டு இப்போது நாடகம் ஆடுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஒரு சமரச முயற்சியாக, பாகிஸ்தான் விளையாடும் மீதமுள்ள போட்டிகளிலிருந்து மட்டும் நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை நீக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. அவ்வாறு நடந்தால், அவருக்குப் பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் நடுவராக நியமிக்கப்படலாம். பாகிஸ்தான் தனது மிரட்டலை நிறைவேற்றுமா அல்லது சமரசத்திற்கு உடன்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.