இஸ்லாமாபாத்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றில் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த நாட்டின் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும், அணியையும் மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருத்து தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற சூப்பர் ஃபோர் போட்டியில், அபிஷேக் ஷர்மா அடித்த அதிரடியான 74 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது. இந்தப் படுதோல்வியைத் தொடர்ந்து, இம்ரான் கான்-இன் சகோதரி அலீமா கான் செய்தியாளர்களிடம் பேசியபோது, சிறையில் உள்ள தனது சகோதரரின் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

தற்போது சிறையில் உள்ள இம்ரான் கான், "பிசிபி தலைவர் மோஷின் நக்வியும், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர்-உம் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்த முடியும்" என்று கேலியாக கூறி இருக்கிறார்.
இம்ரான் கான் தனது கிண்டலை இத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டுமென்றால், பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி காசி ஃபயஸ் ஈசா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜா ஆகியோர் கள நடுவர்களாகச் செயல்பட வேண்டும் என்றும், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சர்பராஸ் டோகர் மூன்றாவது நடுவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக அலீமா கான் தெரிவித்தார். பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாகச் சூழலை கிரிக்கெட் தோல்வியுடன் ஒப்பிட்டு இம்ரான் கான் செய்துள்ள இந்த நையாண்டி, பாகிஸ்தான் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
72 வயதாகும் இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மோஷின் நக்வி, தனது திறமையின்மையாலும், நெபோடிசம் (nepotism) எனப்படும் சொந்தப்பற்றாலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட்டதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும், ராணுவத் தளபதி ஆசிம் முனீர், கடந்த பிப்ரவரி 2024 பொதுத் தேர்தலில் தனது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் வெற்றியைத் திருடிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு வழக்குகளில் சிக்கி, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் இம்ரான் கான் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மோஷின் நக்வி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த ஆசிய கோப்பை தொடர் தொடங்கியது முதலே, அவர் தலைமையிலான பிசிபி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. லீக் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்த சம்பவத்திற்கு, போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்-இன் ஒருதலைப்பட்சமான நடத்தைதான் காரணம் என்று பிசிபி, ஐசிசி-யிடம் புகார் அளித்தது.
மேலும், நடுவரை மாற்றாவிட்டால் தொடரைப் புறக்கணிப்போம் என்று மிரட்டல் விடுத்தது, ஆனால் பின்னர் பின்வாங்கியது. இது தவிர, இரண்டு முறை போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்புகளையும் பாகிஸ்தான் அணி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இந்த அரசியல் மற்றும் நிர்வாகக் குழப்பங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அணி தனது அடுத்த வாழ்வா-சாவா போட்டியில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று அபுதாபியில் இலங்கையை எதிர்கொள்கிறது.