துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரில் முக்கிய லீக் ஆட்டமாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் மோதுகிறது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஏற்கனவே ஓய்வு பெற்ற நிலையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அல்லது விராட் கோலி இல்லாமல் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும். அதேபோன்று பாகிஸ்தான் அணியிலும் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறவில்லை.

இதனால் பாகிஸ்தானை இந்திய அணியால் சமாளிக்க முடியுமா? இல்லை இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் தெரிவித்திருக்கிறார். அதில், இந்த பாகிஸ்தான் அணியை இந்தியாவின் பி அணியே தோற்கடித்து விடும். ஏனென்றால் காலம் மாறிவிட்டது.
நாம் 90களில் விளையாடிய போது பாகிஸ்தான் அணி பலமாக விளங்கியது. ஆனால் தற்போது நிலைமை அப்படி கிடையாது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை நான் மிஸ் செய்ய மாட்டேன். அப்படி நான் மிஸ் செய்ய வேண்டும் என்றால் கவாஸ்கர், கபில் தேவையும் நான் மிஸ் செய்திருக்க வேண்டும். அரசர் இறந்துவிட்டார் அரசர் நீடோடி வாழ வேண்டும் என்று கூறிவிட்டு அடுத்த விஷயத்தை நோக்கி நாம் நகர வேண்டும்.
புதிய சூப்பர் ஸ்டார்கள் வந்து விட்டார்கள். எனவே இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். தேர்வு குழுவினரின் பணியை நினைத்தாலே மிகவும் பாவமாக இருக்கிறது. ஏனென்றால் யாரை தேர்வு செய்வது? யாரை அணியை விட்டு நீக்குவது என்று பெருங்குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
அந்த அளவுக்கு திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்று அதுல் வாசன் தெரிவித்துள்ளார். கடைசியாக இரு அணிகளும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மோதியது. இதில் விராட் கோலி அபாரமாக சதம் அடித்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.