கொழும்பு: 2026 டி20 உலககோப்பை போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் அணி நாளை ஞாயிற்றுகிழமை கொழும்பில் மோத உள்ளன. இதுவரை டி20 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானை 7 முறை இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இந்த சூழலில் 8வது முறை இந்திய அணி வெற்றி பெற்று சாதிக்குமா? இல்லை பாகிஸ்தான் பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்தப் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பாகிஸ்தான் இங்கு தொடர்ச்சியாக விளையாடி வருவதால் ஒரு சிறிய சாதகம் அவர்களுக்கு உள்ளது. ஆனால் நாங்கள் மற்ற அணியின் மீது கவனம் செலுத்துவதை விட, எங்களது ஆட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்த விரும்புகிறோம்." என்று சூர்யகுமார் தெரிவித்தார்.

"அதுமட்டும் இல்லாமல், இலங்கை எங்களது அண்டை நாடு தான். இங்கும் ஆடுகளம் இந்தியா போன்ற ஆடுகளத்தை விட கொஞ்சம் தான் வித்தியாசமாக இருக்கும். இங்கு நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடி அனுபவத்தை பெற்றுள்ளோம். இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் இனி இருத்தரப்பு தொடரில் விளையாடுமா என்று எனக்கு தெரியாது. அது குறித்து பிசிசிஐ தான் முடிவு எடுக்க வேண்டும்"
"பிப்ரவரி 15ஆம் தேதி பாகிஸ்தானுடன் விளையாட போகிறோம் என்று தெரிந்த உடன் அதற்காக நாங்கன்ள தயாராகி விட்டோம். இது உலக கிரிக்கெட்டில் மிகப் பெரிய போட்டி. அதுவும், உலககோப்பை போன்ற பெரிய தொடரில் மோதுவது எப்போதுமே எதிர்பார்ப்பை அதிகரிக்கும். நாங்களும் பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக விளையாடி வருகிறோம்."
"நாளை மழை பெய்யுமா? பெய்யாதா என்று தெரியவில்லை. அது எங்கள் கையில் இல்லை. இங்கு நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவே வந்திருக்கிறோம். பாகிஸ்தான் அபிஷேக்கை விளையாட விரும்பினால், அவர் நாளைய ஆட்டத்தில் நிச்சயம் விளையாடுவார்." கைகுலுக்கல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சூர்யகுமார் யாதவ், "24 மணி நேரம் காத்திருங்கள். நாங்கள் இங்கு கிரிக்கெட் ஆடவும், நல்ல உணவு உண்டு உறங்கவும் மட்டுமே வந்துள்ளோம்" என பதிலளித்தார்.
“சில சமயங்களில் ஒரு தேர்வில் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கேள்வி வரும், ஆனால் அதைத் தாண்டிச் செல்ல முடியாது. அதை சமாளிக்க நீங்கள் ஏதாவது முயற்சிக்க வேண்டும். ஆம், அவர் ஒரு வித்தியாசமான பந்துவீச்சாளர், ஆனால் அதே நேரத்தில், நாம் சரணடைய முடியாது. இதேபோன்ற பந்துவீச்சு கொண்ட பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் பயிற்சி செய்துள்ளோம்.”