Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா எடுத்த புதிய அஸ்திரம்.. கோல்கீப்பராக மாறிய இந்திய வீரர்கள்!

துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ள நிலையில் இந்திய அணி தனது பயிற்சியில் ஒரு புதுவிதமான ஃபீல்டிங் வியூகத்தை அறிமுகப்படுத்தி மிரள வைத்துள்ளது. இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப், வீரர்களின் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, கால்பந்து கோல்கீப்பரின் பயிற்சியைப் போன்ற ஒரு புதிய முறையைக் கையாண்டுள்ளார்.

2025 ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டி செப்டம்பர் 14 அன்று நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் துபாயில் வித்தியாசமான ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். இந்திய அணியின் வலைப்பயிற்சிக்கு தொலைவில், ஒரு கோல்போஸ்ட் அளவிலான பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டு இருந்தது.

IND vs PAK India s New tactic Against Pakistan Shubman Gill Become Goalkeeper

இந்தப் பயிற்சியில், புதிய பந்துகள் வேகமாக அடிக்கப்பட்டு, வீரர்கள் தங்கள் 'கோல்' பகுதியை பாதுகாத்து, ஐந்து கேட்ச்களை இரண்டு செட்களாகப் பிடிக்க வேண்டும். பந்துகள் அதிவேகமாக வருவதால், வீரர்களின் எதிர்வினை நேரத்தையும் (reaction time), டைவிங் திறனையும் மேம்படுத்த இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியை ஹர்திக் பாண்டியா முதலில் தொடங்கினார். முதல் பந்தை தவறவிட்டாலும், அடுத்தடுத்து சில அபாரமான கேட்ச்களைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். குறிப்பாக, அவர் பிடித்த ஒரு கேட்ச் சிவம் துபேவையே வியப்பில் ஆழ்த்தியது.

அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் ரிங்கு சிங் ஜோடி பயிற்சியை அனல் பறக்க வைத்தது. சுப்மன் கில், முழுவதுமாக டைவ் அடித்து நான்கு அசத்தலான கேட்ச்களைப் பிடித்தார். இதைப் பார்த்த பயிற்சியாளர் டி. திலீப், "நீ இதை ஒரு பழக்கமாகவே மாற்றிவிட்டாய்" என்று உற்சாகமாகப் பாராட்டினார். ரிங்கு சிங் முதல் செட்டில் சற்று தடுமாறினாலும், சுப்மன் கில்லின் உதவியுடன் இரண்டாவது செட்டில் சிறப்பாகச் செயல்பட்டார். திலக் வர்மா மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரும் இந்தப் பயிற்சியில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

பயிற்சியில் பதக்கம் வென்ற ரிங்கு சிங்!

முன்னதாக, வீரர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு மூன்று இலக்குகள் குறிவைத்து அடிக்க கொடுக்கப்பட்டன. சிவம் துபே முதலில் இலக்கை சரியாகத் தாக்கினாலும், இறுதியில் இந்த சவாலில் ரிங்கு சிங்கே வெற்றி பெற்றார். அவரது சிறப்பான ஃபீல்டிங்கைப் பாராட்டி, பயிற்சியாளர் டி. திலீப் அவருக்கு சிறப்புப் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.

'பிரான்கோ டெஸ்ட்' என்றால் என்ன?

இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் பிரான்கோ டெஸ்ட் என்ற கடினமான உடற்தகுதி சோதனையையும் மேற்கொண்டு உள்ளனர். அதன் அடுத்தகட்டமாகவே இந்த அதிவேக ஃபீல்டிங் பயிற்சி அமைந்துள்ளது. இந்திய அணியின் உடற்தகுதி மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் அட்ரியன் லு ரூக்ஸ், வீரர்களுக்கு நடத்தப்படும் 'பிரான்கோ டெஸ்ட்' குறித்து விளக்கினார்.

"நாங்கள் இன்று செய்த ஓட்டம் 'பிரான்கோ ரன்'. இது பல ஆண்டுகளாக பல்வேறு விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஒரு முறைதான். இது வீரர்களின் ஏரோபிக் ஃபிட்னஸ் (aerobic fitness) எந்த நிலையில் உள்ளது என்பதை அளவிடவும், அதை ஒரு பயிற்சி முறையாகவும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், வீரர்களின் உடற்தகுதி சரியான திசையில் செல்கிறதா என்பதை எங்களால் கண்டறிய முடியும். இது ஒரு களப் பயிற்சி என்பதால், உலகின் எந்த மைதானத்திலும் இதை நாங்கள் செய்ய முடியும். இது வீரர்கள் தங்களைத் தாங்களே மதிப்பிட்டுக் கொள்ளவும் உதவுகிறது" என்று பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, பேட்டிங், பந்துவீச்சு மட்டுமல்லாமல், ஃபீல்டிங்கிலும் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் இந்திய அணி மிகவும் தீவிரமாக உள்ளது. இந்த புதிய பயிற்சி முறைகள், களத்தில் இந்திய வீரர்களின் செயல்பாட்டை நிச்சயம் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, September 13, 2025, 16:08 [IST]
Other articles published on Sep 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+