நியூயார்க் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி சிறப்பாக இருந்ததாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் முக்கிய காரணமாக அமைந்தனர். அதிலும் பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக ரோகித் சர்மாவின் கேப்டன்சியும் இருந்தது. இதனை ரசிகர்கள் மறந்துவிட, ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கண்காணித்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், ரோகித் சர்மா அனுபவம் வாய்ந்த கேப்டன். இந்த போட்டியில் அவரின் கேப்டன்சியை பார்த்து, உங்கள் கேப்டன்சி அற்புதமாக இருப்பதாக பாராட்டினேன்.
இதற்கு மேல் ரோகித் சர்மா தனது கேப்டன்சியில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இந்த இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு அதிகளவிலான பவுலர்கள் தயாராக உள்ளனர். ஐபிஎல் தொடரிலும் ரோகித் சர்மாவுக்கு அப்படியான அணி தான் அமைந்திருந்தது. ஆனால் ரோகித் சர்மா வித்தியாசப்படுவது எங்கென்றால், அவர்களை புரிந்து கொள்வதில் தான்.
அவர்களின் மனநிலையையும், திறமையையும் புரிந்து சரியான நேரத்தில் பயன்படுத்துகிறார். அதேபோல் கேப்டனாக ரோகித் சர்மா சரியான திட்டத்துடன் செல்கிறார். பவுலர்களுக்கு தனது திட்டத்தை கொடுத்து அதனை செயல்படுத்த வைக்கிறார். அதன் மூலமாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவதாக நினைக்கிறேன். அதேபோல் அக்சர் படேல் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார்.
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பிட்சில் ஸ்பின்னராக 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸின் போது வெளிச்சம் கூடுதலாக வந்த போது, உடனடியாக தகவமைத்து அதற்கேற்ப லெந்தில் வீசினார் அக்சர் படேல் என்று பாராட்டியுள்ளார். மேலும், மும்பை அணியின் கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மாவை அந்த அணி நிர்வாகம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.