ஆரம்பமே அதிர்ச்சி.. டாஸ் போடுவதற்காக வந்த பாபர் அசாம்.. போட்டிக்கு முன்பே வம்புக்கு இழுத்த ரசிகர்கள்
அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடுவதற்காக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் களமிறங்கிய போது ரசிகர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ளது. 1.32 லட்சம் பேர் அமரக் கூடிய அகமதாபாத் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் நீல ஜெர்சியை அணிந்து ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பி வருகின்றனர். எந்த பக்கம் திரும்பினாலும் நீலக் கடல் போல் மக்கள் இந்திய அணிக்கு ஆதரவாக அமர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் இருவரும் டாஸ் போடுவதற்காக ஒன்றாக நடந்து வந்தனர். அப்போதே ரசிகர்களின் கரகோஷம் விண்ணை தொட்டது. இதன்பின் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அகமதாபாத் மைதானத்தில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் மாறும். இதன் காரணமாகவே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். டாஸை வென்றதன் மூலம் இந்திய அணி கூடுதல் சாதகம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்ல முடியும். அதுமட்டுமல்லாமல் அகமதாபாத் மைதானத்தில் சேஸிங் செய்த அணிகளே அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.
ஒவ்வொரு இன்னிங்ஸ் தொடங்கும் போதும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சீம் மற்றும் ஸ்விங் கிடைக்கும். ஆனால் சில ஓவர்களுக்கு பின் ஆடுகளம் பிளாட் பிட்ச்சாக மாறிவிடும். இதனால் இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. டாஸின் போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேசுகையில், மைதானத்தில் இருந்த இந்திய அணி ரசிகர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.
இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆடுவதற்காக களமிறங்கிய பாபர் அசாமிற்கு இப்படியொரு வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக எதிரணிக்கும் மரியாதை அளிக்கும் இந்திய ரசிகர்கள், பாகிஸ்தான் கேப்டனை வம்புக்கு இழுத்து வெறுப்பை உமிழ்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications