Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: பாகிஸ்தான் போட்டிக்கு முன் வெளிச்சத்துக்கு வந்த இந்திய அணியின் பலவீனம்.. ஸ்பின் சிக்கல்

கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும் முனைப்பில் உள்ளது. அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான வெற்றிகள் இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அந்தப் போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்திய ஆட்டம் சற்றே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட திடீர் சரிவுகள், பாகிஸ்தான் போட்டிக்கு முன் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளன.

IND vs PAK India s Batting Struggles Against Mystery Spin Exposed Ahead of India vs Pakistan match

தொடர் சரிவுகள்

மும்பையில் நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில், இந்திய அணி ஒரு கட்டத்தில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துத் தடுமாறியது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மட்டும் பொறுப்புடன் ஆடவில்லை என்றால் அந்தப் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதேபோல, டெல்லியில் நடைபெற்ற நமீபியாவுக்கு எதிரான போட்டியில், கடைசி 11 பந்துகளில் மட்டும் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

நமீபியா போட்டியின் நடுவே, அந்த அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் ஆகியோர் வீசிய பந்துகளைக் கணிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.

சுழற்பந்து வீச்சில் திணறல்

நமீபியா கேப்டன் எராஸ்மஸ் ஒரு முழுநேர பந்துவீச்சாளர் கிடையாது. இருப்பினும், அவர் பந்தை வீசும்போது கையைத் தாழ்த்தி வீசும் பாணியையும் (Slinging action), பந்துவீசும் எல்லைக்கோட்டிற்குப் பின்னால் இருந்து வீசும் தந்திரத்தையும் கையாண்டார். இதை எதிர்கொள்ள முடியாமல் முன்னணி வீரர்களே தடுமாறினர். சுழற்பந்து வீச்சை வெளுத்து வாங்கும் சூர்யகுமார் யாதவ் கூட ஸ்கோல்ட்ஸ் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆனார்.

பாகிஸ்தான் விரிக்கும் வலை

இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் இயல்பாகவே சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானது. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான், அப்ரார் அகமது, முகமது நவாஸ் மற்றும் சயிம் அயூப் எனச் சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டாளமே உள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உஸ்மான் தாரிக் அச்சுறுத்தல்

இதில் இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கப் போவது உஸ்மான் தாரிக் என்ற சுழற்பந்து வீச்சாளர்தான். நமீபியா கேப்டன் எராஸ்மஸ் பந்துவீசியதைப் போலவே, இவரும் வித்தியாசமான முறையில் பந்துவீசக்கூடியவர். பந்தை வீசுவதற்கு முன் கையை நீண்ட நேரம் நிறுத்தி, பின்னர் திடீரென வீசுவது இவரது வழக்கம். ஏற்கனவே எராஸ்மஸ் பந்துவீச்சில் திணறிய இந்திய வீரர்கள், அவரை விடத் துல்லியமாக வீசக்கூடிய உஸ்மான் தாரிக்கை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

அமெரிக்கா மற்றும் நமீபியா போன்ற அனுபவம் குறைந்த அணிகளால் இந்திய அணியின் இந்தத் தடுமாற்றத்தைப் பயன்படுத்தி வெற்றியைப் பறிக்க முடியவில்லை. ஆனால் பாகிஸ்தான் அணி அப்படி இருக்காது. சிறிய வாய்ப்புக் கிடைத்தாலும் அதை வெற்றியாக மாற்றத் துடிக்கும். இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை நிதானமாகக் கையாண்டால் மட்டுமே பாகிஸ்தானை வீழ்த்த முடியும்.

இல்லையெனில், கடந்த இரண்டு போட்டிகளில் நடந்தது போன்ற 'திடீர் சரிவு' பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கனவே, ஆடுகளத்துக்கு வெளியே இந்தியா, பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடுகள் பெரிதாகி உள்ளன. எனவே, பாகிஸ்தான் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் கவனமாக விளையாட வேண்டும்.

Story first published: Friday, February 13, 2026, 13:35 [IST]
Other articles published on Feb 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+