கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 18 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டே வீசி இந்திய அணியை திணறடிக்க பார்த்தது. ஆனாலும், இந்திய வீரர்கள் அதை சமாளித்து 175 ரன்கள் குவித்தனர்.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடிக்கு வெறும் 2 ஓவர்கள் மட்டுமே வழங்கினார். மீதமுள்ள 18 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, போட்டியின் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். கேப்டன் சல்மான் அலி ஆகா வீசிய அந்த ஓவரில், அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் 1 ரன்னுக்கு 1 விக்கெட் என இந்தியா தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் நின்ற இஷான் கிஷன் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சை துணிச்சலாக எதிர்கொண்டார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளை விளாசிய அவர், வெறும் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். இந்தியாவின் ஸ்கோர் உயர்வதற்கு இஷான் கிஷனே முக்கிய காரணமாக அமைந்தார்.
இஷான் கிஷனுக்குத் துணையாக ஆடிய திலக் வர்மா 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடினார். இருப்பினும், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.
ஆட்டத்தின் 15வது ஓவரை வீசிய சயிம் அயூப், அடுத்தடுத்து திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தது அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.
கடைசி கட்டத்தில் சிவம் துபே 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர் அடங்கும். ரிங்கு சிங் 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் அக்சர் படேல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
பாகிஸ்தான் தரப்பில் சயிம் அயூப் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உஸ்மான் தாரிக் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி சிக்கனமாகப் பந்துவீசினார்.
இறுதியில் இந்தியா 175 ரன்கள் எடுத்துள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் 176 ரன்கள் என்ற இலக்கு பாகிஸ்தானுக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.