நியூயார்க் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா பல்வேறு விவகாரங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா, தனி வீரராக வெற்றியை தேடி கொடுத்துள்ளார். 4 ஓவர்கள் வீசிய பும்ரா வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 11 டாட் பால்கள் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வென்று ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தி உள்ளார்.

இந்த போட்டிக்கு பின் மனைவி சஞ்சனா கணேசனுக்கு பேட்டியளித்த நட்சத்திர வீரர் பும்ரா, என்னை பொறுத்தவரை நமது கட்டுப்பாட்டில் இருப்பதை மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைப்பேன். ஓராண்டுக்கு முன்பாக சிலர், நான் இனி கிரிக்கெட் விளையாடவே வாய்ப்பில்லை என்று கூறி வந்தனர். ஆனால் அவர்களின் கேள்வி இப்போது மாறியுள்ளது.
ஆனால் ஒருநாளும் அவர்களின் விமர்சனங்கள் என்னை பாதித்ததில்லை. ஏனென்றால் எப்போதும் சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. என் முன்னால் நிற்கும் பிரச்சனைக்கு பதில் தேடுவதே எனது இயல்பு. வழக்கம் போல் பிராசஸில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாததை பற்றி கவலைப்பட தேவையில்லை. எல்லோரும் சொல்லும் பதில் இதுதான்.
என்னுடைய தேடலும், பதிலும் இதுதான். என்னுடைய கவனம் எல்லாமே இந்த பிட்சில் என்ன வித்தியாசமாக செய்ய முடியும். இந்த பிட்சில் எதிரணி பேட்ஸ்மேன்கள் ஷாட்கள் விளையாட முடியாமல் செய்ய எந்த லெந்தில் வீச வேண்டும். அதற்கான சிறந்த பந்துகள் எவை? என்று கண்டுபிடிக்க முயற்சிப்பேன். எப்போதும் நிகழ்காலத்தில் மட்டும் கவனத்தை வைப்பேன்.
வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை பற்றி கவலைப்பட்டால், அவர்களின் அழுத்தமும், உணர்வும் என்னையும் பாதிப்படைய செய்யும். அதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்த பேட்டி முடிவடைந்த பின் சஞ்சனாவிடம், அரை மணி நேரத்தில் பார்க்கலாம் என்று பும்ரா கூறினார். அதற்கு சஞ்சனா, டின்னர் எங்கே என்று முடிவுடன் இருங்கள் என்று பதில் அளித்தது ட்ரெண்டாகி வருகிறது.