IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் "விஷத்தன்மை" கொண்ட நாடகம்.. இங்கிலாந்து ஜாம்பவான் விளாசல்
கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது கிரிக்கெட் போட்டி என்பதைத் தாண்டி, அரசியல் கலந்த ஒரு "விஷத்தன்மை" வாய்ந்த நாடகமாக மாறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பணம் தான் பேசுகிறது
இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் மைக்கேல் ஆதர்டன். "நவீன கிரிக்கெட்டில் பணம் பேசுவதை விடக் கத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பது தற்போது 'நடக்காமல் இருக்கலாம் என சொல்ல முடியாத அளவுக்குப் பெரியதாக' மாறிவிட்டது. சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் வருமானம் மற்றும் செயல்பாடு முழுவதும் இந்தப் போட்டியில்தான் அடங்கியுள்ளது. அதனால் எப்படியாவது இந்தப் போட்டியை நடத்திவிடுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விஷத்தன்மை வாய்ந்தது
மேலும் அவர் கூறுகையில், "இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நச்சுத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. அப்படி இருக்கும்போது, நடுநிலையான இடத்தில் நடக்கும் இந்த ஒரு போட்டியை நம்பித்தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் பொருளாதாரமும் உள்ளது என்பது எவ்வளவு பலவீனமானது? இது தற்போது ஒரு கவர்ச்சிகரமான போட்டியாக இல்லை. மாறாக, அரசியல் லாபங்களுக்கான ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ளது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பல்டி அடித்தது ஏன்?
சமீபத்தில் பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாக மிரட்டியது. ஆனால், கடைசியில் விளையாடச் சம்மதித்தது. இதற்குக் காரணம் பொருளாதாரம் தான் என்று ஆதர்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
"பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிப்பதாகச் சொன்னதும் கிரிக்கெட் உலகில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அரசாங்கங்கள் தலையிட்டு, நட்பு, வரலாறு எனப் பல காரணங்களைச் சொல்லி இந்தப் போட்டியை நடத்த வைத்துள்ளன. ஏனெனில் ஐசிசி என்பது தற்போது ஒரு 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' நிறுவனம் போலச் செயல்படுகிறது. அவர்களுக்கு இந்தப் போட்டி நடந்தாக வேண்டும். இல்லையென்றால் வருமானம் பாதிக்கும்" என்று அவர் விமர்சித்துள்ளார்.
உண்மையான மகிழ்ச்சி எங்கே?
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை விட, மும்பையில் நடந்த நேபாளம் - இத்தாலி போட்டியே தனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தந்ததாக அவர் கூறியுள்ளார்.
"மும்பையில் நடந்த போட்டியில் இத்தாலி அணி தனது முதல் உலகக்கோப்பை வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணியில் பீட்சா செய்பவர், தச்சு வேலை செய்பவர், உடற்கல்வி ஆசிரியர் எனச் சாமானியர்கள் விளையாடி வென்றுள்ளனர். அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிதான் உண்மையான கிரிக்கெட். அதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை" என்று ஆதர்டன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான கிரிக்கெட் விளையாட்டுக்கும், பணம் சார்ந்த கிரிக்கெட் விளையாட்டுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டு செல்வதாக மைக்கேல் ஆதர்டன் கவலைப்பட்டு இருக்கிறார். அவர் சொல்வதில் சில நியாயங்களும் உள்ளன.


Click it and Unblock the Notifications