கராச்சி: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்திய இந்திய அணி போட்டி முடிவடைந்த போது கைகுலுக்காமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் போட்டி முடிவடைந்த உடன் பரிசளிக்கும் நிகழ்ச்சியில் இந்திய ராணுவம் குறித்தும் பஹல்காம் தாக்குதல் குறித்தும் சூரியகுமார் பேசியது பாகிஸ்தானுக்கு எரிச்சலை தந்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது யூசுப் சூரியகுமார் யாதவை பன்றியுடன் ஒப்பிட்டு பேசிய சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நேரலையில் சூரிய குமார் பெயரை வேண்டும் என்று பன்றியுடன் தொடர்புபடுத்தி அவர் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

முஹம்மது யூசுப் பின் இந்த பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தனது பேச்சு குறித்து முகமது யூசுப் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் எந்த ஒரு விளையாட்டு வீரரையும் மரியாதை குறைவாக பேசும் பழக்கம் உடையவன் அல்ல.
அனைத்து வீரர்களுமே தங்களது நாட்டுக்காக தான் விளையாடுகிறார்கள். அதை நான் என்றுமே மதிப்பேன். ஆனால் இர்பான் பதான் சில நாட்களுக்கு முன்பு சையது அப்ரிடி நாய் உடன் ஒப்பிட்டு சில கருத்துக்களை பேசினார். அப்போது இந்த ஊடகங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தது. இர்பானை மட்டும் அப்போது அனைவரும் பாராட்டினர்களே?
அது தவறு தானே. நீங்களும் பதானை கண்டித்து இதுபோல் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கலாம் அல்லவா? ஆனால் அப்போது அனைவரும் அதனை கொண்டாடினீர்கள் தானே. அனைவரையும் ஒரே மாதிரி மரியாதையுடன் நடத்துங்கள் என்று முகமது யூசுப் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இர்பான் பதான் அளித்த பேட்டி ஒன்றில் 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது அப்ரிடி, சின்ன பையா எப்படி இருக்க என்று கேட்டார். அதற்கு நீங்கள் எப்போது என்னுடைய தந்தையாக மாறினீர்கள் என்று நான் பதில் அளித்தேன். இதனால் கடுப்பான அபிரிடி என்னை திட்டினார். உடனே, நான் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக்கிடம் அவர் என்ன நாய் கறி சாப்பிட்டாரா? நாயை போல கத்தி கொண்டிருக்கிறார் என்று கூறினேன் என்றார். இதனை குறிப்பிட்டு தற்போது முகமது யூசுப் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.