Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: மோஷின் நக்வியின் எல்லை மீறிய பதிவு.. இந்தியா கோப்பையை வாங்க மறுத்த காரணமே இதுதான்

துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மோஷின் நக்வியின் கையால் கோப்பையைப் பெற மறுத்ததன் உண்மையான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. அது வெறும் 'கைகுலுக்க மாட்டோம்" என்ற கொள்கை மட்டுமல்ல, மோஷின் நக்வி தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட இந்தியாவுக்கு எதிரான சீண்டும் பதிவுகளே முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. அதுவும் இறுதிப் போட்டிக்கு முன் இரண்டு முறை இந்தியாவை சீண்டும் பதிவுகளை அவர் வெளியிட்டு இருந்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி, பாகிஸ்தான் வீரர்களிடமிருந்து சற்று விலகியே இருந்தது. இதுகுறித்து பிசிபி தலைவர் மோஷின் நக்வி, ஐசிசியிடம் புகார் அளித்ததுடன் நிற்கவில்லை. அவர், தனது 'X' (முன்னர் ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில், இந்தியாவைக் கிண்டல் செய்யும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் பல பதிவுகளை வெளியிட்டார்.

IND vs PAK Mohsin Naqvi s Social Media Posts before Asia Cup finals Sparked the Controversy

கிறிஸ்டியானோ ரொனால்டோ வீடியோ: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது, இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற தகவலைக் குறிப்பிடும் வகையில், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது போலச் சைகை செய்யும் வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார்.

போர் விமானப் புகைப்படம்: இறுதிப் போட்டிக்கு முன்பு, 'இறுதி நாள்' (Final Day) என்ற தலைப்பில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோர், போர் விமானிகள் அணியும் உடையை (flight suits) அணிந்திருப்பது போலவும், பின்னணியில் போர் விமானங்கள் பறப்பது போலவும் சித்தரிக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்தார்.

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருக்கும் மோஷின் நக்வியின் இந்த சமூக வலைதளப் பதிவுகளால்தான், இந்திய அணி அவரிடமிருந்து ஆசிய கோப்பையைப் பெற முடியாது என்று திட்டவட்டமாக மறுத்ததாக கூறப்படுகிறது.

பரிசளிப்பு விழாவில் நடந்த குழப்பங்கள்:

போட்டி முடிந்த பிறகு, இந்திய அணி, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் காலித் அல் ஜரூனி கையால் கோப்பையைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது. ஆனால், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் என்ற முறையில், தானே கோப்பையை வழங்குவேன் என்று மோஷின் நக்வி பிடிவாதமாக இருந்துள்ளார்.

இதனால், பரிசளிப்பு விழா சுமார் 45 நிமிடங்கள் தாமதமானது. இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், விழா பாதியிலேயே முடிக்கப்பட்டது. அபிஷேக் ஷர்மா, குல்தீப் யாதவ், திலக் வர்மா ஆகியோர் தங்களது தனிப்பட்ட விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு, மோஷின் நக்வி, ஆசிய கோப்பையைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்.

போட்டி முடிந்த 20 நிமிடங்களுக்குப் பிறகே பரிசளிப்பு விழா மேடை அமைக்கப்பட்டது. கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன. ஒரு நாட்டின் உள்துறை அமைச்சராகவும், ஆசிய கிரிக்கெட்டின் தலைவராகவும் இருக்கும் ஒருவர், விளையாட்டு மனப்பான்மையை மீறி, ஒருதலைப்பட்சமாகவும், சீண்டும் வகையிலும் நடந்துகொண்டதே இந்த குழப்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்று இந்திய அணி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Story first published: Monday, September 29, 2025, 14:07 [IST]
Other articles published on Sep 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+