21 ரன்களுக்கு 7 விக்கெட்ஸ்.. பாகிஸ்தான் அணியை சுக்குநூறாக்கிய குல்தீப்.. 146 ரன்களுக்கு ஆல் அவுட்!
துபாய்: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 147 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி 21 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்ததால், பாகிஸ்தான் இன்னிங்ஸின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் இந்திய அணியால் எளிதாக ஆசியக் கோப்பையை கைப்பற்ற முடியும் என்று பார்க்கப்படுகிறது.
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக களமிறங்காததால், ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் ஃபர்ஹான் - ஃபகர் ஜமான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இருவரும் நிதானமாக தொடங்கிய நிலையில், பும்ரா பந்தில் ஃபர்ஹான் அதிரடியாக ரன்களை குவித்தார். அதிலும் 4வது ஓவரில் பும்ரா வீசிய ஸ்லோயர் பந்தில் ஃபர்ஹான் அடித்த சிக்ஸ், இந்திய ரசிகர்களை மிரள செய்தது. இதனால் 6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்களை சேர்த்தது. பின்னர் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வர, ஃபர்ஹான் கொஞ்சம் அசராமல் அதிரடி காட்டினார்.
சிறப்பாக ஆடிய அவர் 35 பந்துகளில் அரைசதம் கடக்க, பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செய்ய தொடங்கியது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர், வருண் சக்கரவர்த்தி பவுலிங்கில் 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் பாகிஸ்தான் அணி சீட்டுக் கட்டை போல் சரியத் தொடங்கியது. இளம் வீரர் சயீம் அயூப் 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரிலேயே முகமது ஹாரிஸ் டக் அவுட்டாகி வெளியேற, அதற்கு அடுத்த ஓவரில் ஃபகர் ஜமான் 46 ரன்களில் பெவிலியன் சென்றார். இதனால் பாகிஸ்தான் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் 17வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் பவுலிங்கில் கேப்டன் சல்மான் 8 ரன்களிலும், ஷாகீன் அப்ரிடி மற்றும் ஃபஹீம் அஷ்ரப் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
இதனால் 17 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 134 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் டெய்லண்டர்களை வீழ்த்த பும்ரா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அவரின் ஓவரில் ஹாரிஸ் ராஃப் 6 ரன்களில் வெளியேற, இறுதியாக முகமது நவாஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


Click it and Unblock the Notifications