துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் பரிசளிப்பு விழாவில் பெரும் குழப்பம் வெடித்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து ஒரு புதிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார். "கேமராக்கள் இல்லாதபோது சூர்யகுமார் யாதவ் என்னிடம் கை குலுக்கினார், ஆனால் கேமராவுக்கு முன்னால் கைகுலுக்க மறுத்துவிட்டார்" என்று அவர் கூறியுள்ளது, பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
சல்மான் அகா கூறியது என்ன?
தோல்விக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய சல்மான் அகா, இந்தியாவின் 'கைகுலுக்க மாட்டோம்" என்ற கொள்கை குறித்துப் பேசுகையில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். "அவர் (சூர்யகுமார் யாதவ்) தனிப்பட்ட முறையில் என்னிடம் கை குலுக்கினார். தொடர் தொடங்குவதற்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பிலும், போட்டி நடுவர் கூட்டத்தில் நாங்கள் சந்தித்தபோதும் அவர் கை குலுக்கினார். ஆனால், அவர்கள் கேமராக்களுக்கு முன்னால் வெளியே வரும்போது, அவர்கள் எங்களுடன் கை குலுக்க மாட்டார்கள்" என்று சல்மான் அகா கூறினார்.

"அவருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைத்தான் அவர் பின்பற்றுகிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அது அவரது தனிப்பட்ட முடிவாக இருந்திருந்தால், அவர் என்னிடம் கை குலுக்கியிருப்பார்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அணியின் இந்தச் செயல்களால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறிய அகா, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். "இந்தத் தொடரில் இந்தியா செய்தவை மிகவும் ஏமாற்றமளிக்கின்றன. அவர்கள் எங்களுடன் கைகுலுக்காததன் மூலம் எங்களை அவமதிக்கவில்லை, அவர்கள் கிரிக்கெட்டை அவமதிக்கிறார்கள். நல்ல அணிகள் இன்று அவர்கள் செய்ததைப் போலச் செய்யாது" என்று கடுமையாகச் சாடினார்.
பரிசளிப்பு விழா குறித்துப் பேசிய அவர், "நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்ற விரும்பியதால், கோப்பையுடன் நாங்களாகவே சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நாங்கள் அங்கே நின்று எங்கள் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டோம். நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் அவர்கள் மிகவும் அவமரியாதையாக நடந்துகொண்டனர். என் வாழ்வில் இது நடப்பதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. இந்தத் தொடரில் நடந்தவை மிகவும் மோசமானவை, இது ஒரு கட்டத்தில் நிற்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல" என்று சல்மான் கூறினார்.
இந்தச் சர்ச்சைகள் இளம் தலைமுறையினரிடம் தவறான செய்தியைக் கொண்டு சேர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார். "நான் ஒரு பாகிஸ்தான் கேப்டன் மட்டுமல்ல, நானும் ஒரு கிரிக்கெட் ரசிகன். இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஒரு குழந்தை இதைப் பார்த்தால், நாம் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பவில்லை. மக்கள் எங்களை முன்மாதிரியாக நினைக்கிறார்கள், ஆனால் நாங்கள் இப்படி நடந்துகொண்டால், நாங்கள் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கவில்லை" என்று அவர் கூறினார்.
களத்தில் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்ட சல்மான் அகா , "நாங்கள் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இன்னும் அவர்களுக்குப் பின்னால்தான் இருக்கிறோம். ஒவ்வொரு அணிக்கும் ஒரு சகாப்தம் உண்டு, ஒருவேளை இது இந்திய அணியுடையதாக இருக்கலாம். நாங்கள் 90களில் அவர்களை வீழ்த்தினோம்; இப்போது அவர்கள் எங்களை வீழ்த்துகிறார்கள். மிக விரைவில் நாங்கள் அவர்களை வீழ்த்தத் தொடங்குவோம் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்று கூறி முடித்தார்.