Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK:“கழுத்தை பிடித்து கட்டுப்படுத்தினோம் ஆனால் அபிஷேக்..” பாகிஸ்தான் கோச் மைக் ஹெஸ்ஸன் பேச்சு

துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில், இந்திய அணிக்கு எதிரான போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் செய்த சைகைகள் குறித்து, பிசிசிஐ, ஐசிசியிடம் அதிகாரப்பூர்வ புகார் அளித்திருந்தது. இந்தச் சர்ச்சை பெரிதாக மாறி உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன், இதுகுறித்து முதன்முறையாக தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். மேலும், இந்தியா உடனான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி குறித்து பேசிய அவர் சூப்பர் 4 போட்டியில் கழுத்தை பிடித்து எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம் என பேசி உள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த மைக் ஹெஸ்ஸனிடம், வீரர்களின் சர்ச்சைக்குரிய சைகைகள் மற்றும் பிசிசிஐயின் புகார் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

IND vs PAK Pakistan Coach Mike Hesson Breaks Silence on Controversial Gestures After BCCI Complaint

அதற்குப் பதிலளித்த அவர், "பாருங்கள், எனது செய்தி என்னவென்றால், நாங்கள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம், நிச்சயமாக அதையே செய்வோம். அந்த விஷயங்களைப் (புகார்) பற்றி, என்னை விட உங்களுக்குத்தான் அதிகமாகத் தெரிந்திருக்கும். நான் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே கையாள்கிறேன்" என்று கூறி, புகார் குறித்த நேரடி பதிலைத் தவிர்த்தார்.

பாகிஸ்தான் வீரர்களின் சர்ச்சையான சைகைகள் குறித்து பேசிய அவர், "சைகைகளைப் பொறுத்தவரை, அங்கே எப்போதும் கொஞ்சம் ஆர்வம் (Passion) இருக்கத்தானே செய்யும்? நீங்கள் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் இருக்கும்போது, ஒரு நல்ல ஆட்டத்தை விளையாடுவதில்தான் எங்கள் கவனம் இருக்கும். அதுதான் என் வேலையின் ஒரு பகுதி" என்று கூறி, வீரர்களின் செயலை நியாயப்படுத்த முயன்றார்.

இறுதிப் போட்டி குறித்து ஹெஸ்ஸன்:

ஆசிய கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தத் தொடரில் ஏற்கனவே இரண்டு முறை இந்தியாவிடம் தோல்வியடைந்துள்ளதால், பாகிஸ்தான் அணி சற்று பின்னடைவுடன் இறுதிப் போட்டிக்குச் செல்கிறது.

இருப்பினும், இதுகுறித்து நம்பிக்கையுடன் பேசிய ஹெஸ்ஸன், "நாங்கள் இந்திய அணிக்கு நீண்ட நேரம் அழுத்தம் கொடுக்கும் அளவிற்குச் சிறப்பாக விளையாட வேண்டும், ஏனென்றால் அவர்கள் உலகின் நம்பர் 1 அணியாக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே எங்களுக்கு இருக்கும் சவால்.

முதல் போட்டியை விட, கடந்த சூப்பர் 4 போட்டியில் நாங்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய விதம், ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக இருந்தது. முதல் போட்டியில் நாங்கள் சற்று மந்தமாக ஆடி, இந்தியாவை ஆட்டத்தைக் கட்டுப்படுத்த அனுமதித்துவிட்டோம். ஆனால், கடந்த போட்டியில் நாங்கள் ஆட்டத்த்தின் கழுத்தை பிடித்து நீண்ட நேரம் எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம், அபிஷேக் ஷர்மாவின் ஒரு விதிவிலக்கான இன்னிங்ஸ்தான் எங்களிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் சென்றது" என்றார்.

"இறுதிப் போட்டியில் விளையாட நாங்கள் முழுத் தகுதியானவர்கள். எனவே, இந்த வாய்ப்பை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வோம். கோப்பையை வெல்லும் நிலையில்தான் நாங்கள் இருக்க முயற்சிக்கிறோம்," என்றும் ஹெஸ்ஸன் உறுதியுடன் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய சைகைகள் தொடர்பாக ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர், ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன்பு வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு ஆஜராகவுள்ளனர். இறுதிப் போட்டிக்கு முன்பு அவர்கள் மீது ஏதேனும் தடைகள் விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Friday, September 26, 2025, 12:01 [IST]
Other articles published on Sep 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+