துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்தச் செயலுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் மிகுந்த அதிருப்தியடைந்து இந்திய அணியின் ஓய்வறையை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்போது நடந்த நிகழ்வால் அவர் கோபம் அடைந்தார். என்னதான் நடந்தது என்று விரிவாகப் பார்க்கலாம்.
2025 ஆசிய கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பே, இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என ஒரு தரப்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும், இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர். பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி, அந்த நாட்டுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடக் கூடாது என அவர்கள் முறையிட்டு வந்தனர்.

இதற்கு இடையே இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடியது. இந்த போட்டியின் துவக்கத்தில், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவுடன் கைகொடுக்கவில்லை என்ற சர்ச்சை ஏற்பட்டது. அதன் பிறகு போட்டி நடந்து முடிந்தது. அதில் இந்திய அணி மிக எளிதாக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பிறகு ஆடுகளத்தில் இருந்து வெளியேறி சென்று கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. அவர்கள் நேராக இந்திய அணியின் ஓய்வறைக்குச் சென்றார்கள். மறுபுறம், பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியினர் கைகுலுக்குவார்கள் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்திய வீரர்களின் செயலைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனிடையே, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் மிகவும் அதிர்ச்சியடைந்து, இந்திய அணியினர் ஏன் கைகுலுக்க வரவில்லை எனத் தெரிந்து கொள்வதற்காக இந்திய அணியின் ஓய்வறையை நோக்கிச் சென்றார். ஆனால், இந்திய அணியின் ஓய்வறை உள்பக்கமாகச் சாத்தப்பட்டது. "ஏன் கைகுலுக்கவில்லை என கேட்டால் யாரும் பதில் கூட சொல்ல மாட்டீர்களா?" என அவர் இந்திய முகாம் மீது அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, போட்டியின் முடிவில் இரு அணி கேப்டன்களும் பேச வேண்டிய நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா அந்த நிகழ்ச்சிக்கு வர மறுத்துவிட்டார். இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததாலும், பதில் சொல்ல மறுத்ததாலும் தான் அவர் ஆடுகளத்துக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.