துபாய்: இந்திய அணிக்கு எதிரான தோல்வியால் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 2025 தொடரில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால் அந்த அணியின் கிரிக்கெட் வியாபாரம் பெருமளவில் சரிய உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஊடகத்தில் பேசியிருக்கிறார்.
தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியடைந்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து இருக்கிறது. இந்த நிலையில் அந்தத் தொடரை நடத்தும் பாகிஸ்தான் நாட்டில் இனி கிரிக்கெட் மீது ரசிகர்களுக்கான ஆர்வம் குறையும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

ஏற்கனவே, பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது லாபகரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தற்போது பாகிஸ்தான் அணி தங்கள் சொந்த மண்ணில் விளையாடும் சர்வதேச தொடரிலும் தோல்விகளை சந்தித்து இருப்பதால் அது பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை ஒட்டுமொத்தமாகவே குறைத்து விடும்.
குறிப்பாக, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வென்று இருந்தால் அது நேர்மாறான விஷயத்தை உருவாக்கி இருக்கும். அதாவது பாகிஸ்தானில் கிரிக்கெட் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு பன்மடங்காக அதிகரித்து இருக்கும். ஆனால் தற்போது எல்லாம் தலைகீழாக மாறி இருக்கிறது. இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தற்போது அரையிறுதி வாய்ப்பு இழந்திருக்கும் நிலையில் இந்தத் தொடருக்காக விளம்பரம் செய்த நிறுவனங்கள் தற்போது கவலையில் இருப்பதாகவும், இனி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளுக்கும், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளுக்கும் ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் வருவார்களா? என்ற சந்தேகமும் எழுந்து இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான விளம்பர ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்து இடப்பட்டு இருப்பதால் இது குறித்த பிரச்சனைகள் இப்போது வெளியே தெரியாது. அடுத்து பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடருக்காக விளம்பர நிறுவனங்களை அணுகும்போது தான் இதன் தாக்கம் வெளியே தெரியும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பைச் சேர்ந்த அந்த நபர் கூறி இருக்கிறார். இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் தோல்வியால் பாகிஸ்தான் கிரிக்கெட் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள உள்ளது.