லாகூர்: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று அந்நாட்டு பிரதமப் ஷெபாஸ் ஷெரீஃப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். பிப்ரவரி 15 அன்று கொழும்புவில் இந்தியா,பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற இருந்தது. இந்த சூழலில், புறக்கணிப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இந்த சூழலில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது கடும் நடவடிக்கை, அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி எச்சரிக்கை விடுத்தது. இதனால் பாகிஸ்தான் தனது முடிவிலிருந்து பின்வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், தனது அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவை வெளியிட்டார்.

'ஏ' பிரிவு டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். வங்கதேசத்திற்கு ஆதரவாகத் தங்கள் நாடு உறுதியாக நிற்பதாகவும், விளையாட்டில் அரசியல் கலக்கக் கூடாது என்பதே பாகிஸ்தானின் நிலைப்பாடு எனவும் விளக்கமளித்தார்.
இது குறித்து பேசிய அவர், "டி20 உலகக் கோப்பை தொடர்பாக நாங்கள் ஒரு மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். பாகிஸ்தான் கூறுவது இது விளையாட்டு களம், அரசியல் களம் அல்ல என்பதால், இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாட மாட்டோம். விளையாட்டில் அரசியல் இருக்கக் கூடாது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். வங்கதேசத்துடன் முழுமையாக இணைந்து நிற்க வேண்டும் என கவனமாக முடிவு செய்துள்ளோம், இது மிக்க பொருத்தமான முடிவுதான்," என ஷெபாஸ் ஷெரீஃப் அமைச்சரவையில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவுக்கு எதிரான 'ஏ' பிரிவு போட்டியைப் புறக்கணிக்கும் தனது முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு முறைப்படி தெரிவிக்க மறுத்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்விவகாரம் ஏற்கனவே ஒருவித சர்ச்சையை கிளப்பியிருந்தது.
"இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியைப் புறக்கணிப்பது குறித்து ஐசிசிக்கு பாகிஸ்தான் எந்த அதிகாரப்பூர்வ மின்னஞ்சலையும் அனுப்பாது," என்று செய்திகள் வெளியாகியுள்ளது. . பிசிபி அரசாங்கத்தின் புறக்கணிப்பு முடிவை உலக கிரிக்கெட் அமைப்புக்கு முறையாகத் தெரிவிக்காத பட்சத்தில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடர்ந்து அட்டவணையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பிசிபி-யிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லாததால், ஐசிசி தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க காத்திருக்கும் என முன்பு தகவல்கள் வெளியாகின. எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பும் இல்லாதது, ஐசிசிக்கு குழப்பமான சூழலை உருவாக்கியது. தற்போது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதால், ஐசிசியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தானின் இந்த புறக்கணிப்பு முடிவைப் பொருட்படுத்தாமல், இந்திய அணி கொழும்புவுக்கு பயணிக்கத் தயாராகி வருகிறது. பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்காக, இந்திய அணி போட்டியின் முந்தைய நாள் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பிலும் பங்கேற்க உள்ளது.
போட்டி நடைபெறும் நாளில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் போடுவதற்காகக் களத்திற்கு வருவார். ஆனால், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா டாஸ் போடுவதற்கு வரவில்லை என்றால், போட்டி நடுவர் இந்திய அணிக்கு 'வாக்ஓவர்' (walkover) அளித்து இரண்டு புள்ளிகளை வழங்குவார். இதன் மூலம் இந்தியா எளிதாக வெற்றி பெறும்.
மறுபுறம், ஒருவேளை இந்திய அணி கொழும்புவுக்கு செல்ல மறுத்தால், போட்டி நடுவர் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியை வழங்குவார். இருப்பினும், இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முழு ஆர்வத்துடன் இருப்பதாகவும், திட்டமிட்டபடி கொழும்புவுக்கு பயணிக்கத் தயாராகவும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.