துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டி, மூன்றாவது ஓவரிலேயே ஒரு மிகப்பெரிய சர்ச்சையுடன் தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபக்கர் ஜமான், சஞ்சு சாம்சன் பிடித்த கேட்ச்சால் ஆட்டமிழந்தார். ஆனால், அந்த 'கேட்ச்' சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால், பாகிஸ்தான் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ அம்பயர்களை வைத்து ஏமாற்று வேலை செய்வதாக அவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா பவர் பிளே ஓவர்களை வீசத் தொடங்கினர். ஹர்திக் பாண்டியா வீசிய மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தை அடிக்க முயன்றார் ஃபக்கர் ஜமான். பந்து அவரது பேட்டில் உரசி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன்-ஐ நோக்கிச் சென்றது.

பந்து மிகவும் தாழ்வாக வந்த நிலையில், சஞ்சு சாம்சன் தனது கைகளைத் தரையோடு வைத்து அந்தப் பந்தைக் கேட்ச் பிடித்தார். உடனடியாக அவுட் கேட்டு முறையிட்டதும், அந்த முடிவு மூன்றாவது அம்பயருக்கு அனுப்பப்பட்டது. மூன்றாவது அம்பயர் பலமுறை வீடியோவை 'ரீப்ளே' செய்து பார்த்தார். அதன் பிறகு அவுட் என அறிவித்தார்.
ஆனால், ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, பந்து தரையில் பட்ட பிறகே சஞ்சு சாம்சன்-இன் கைகளுக்குச் செல்வது போலத் தெரிந்தது. ஆனாலும் மூன்றாவது அம்பயர் அவுட் என அறிவித்தார். இதை நம்ப முடியாமல் ஏமாற்றத்தில் உறைந்து போன ஃபக்கர் ஜமான், சிறிது நேரம் களத்திலேயே நின்ற பிறகு வெளியேறினார்.
இந்த முடிவைக் கண்ட பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உடனடியாக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். அம்பயர்கள் பிசிசிஐ-க்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், இந்திய அணி அம்பயர்களை வைத்து ஏமாற்று வேலை செய்வதாகவும் அவர்கள் முறையிடத் தொடங்கினர். ஏற்கனவே, முதல் போட்டியில் மேட்ச் ரெஃப்ரீ இரு அணிகளின் கேப்டன்களையும் கை கொடுக்க வேண்டாம் எனச் சொன்னது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி இருந்தது. தற்போது மீண்டும் அம்பயர்கள் மீது பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஃபக்கர் ஜமான் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பாகிஸ்தான் அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது.