துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாய் மைதானத்தில் நடைபெறுகின்றன. அங்குள்ள ஒரு சிக்கல் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. துபாய் மைதானத்தில் இந்திய அணியின் முதல் போட்டி வங்கதேசத்துக்கு எதிராக நடந்தது.
அந்த போட்டியில் இரண்டு அணிகளுமே ஃபீல்டிங்கில் கேட்சுகளை நழுவ விட்டன. இது இரு அணி ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. வங்கதேச அணி பேட்டிங் செய்த போது கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் கேட்சுகளை நழுவ விட்டனர்.
அதனால் வங்கதேச அணி 150 ரன்களில் சுருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 228 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தபோதும் முக்கியமான நேரத்தில் கே.எல். ராகுல் கொடுத்த கேட்சை ஜாக்கர் அலி நழுவ விட்டார். இவ்வாறு இரு அணி வீரர்களும் ஃபீல்டிங்கில் சொதப்பியது விமர்சனத்துக்கு உள்ளானது.

ஆனால், இதற்கு வீரர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மற்ற மைதானங்களைப் போல துபாய் மைதானத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்காது. மற்ற மைதானங்களில் இரண்டு அல்லது நான்கு இடங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு திசையில் இருந்தும் மைதானத்திற்கு மின் விளக்குகள் மூலம் ஒளி பாய்ச்சப்படும்.
ஆனால், துபாய் சர்வதேச மைதானத்தில் மைதான மேற்கூரையில் "ரிங் ஆஃப் ஃபயர்" எனும் பெயருடன் கூடிய 350 மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கும். அதாவது அந்த மைதானத்தின் மேற்கூரை முழுவதும் வட்ட வடிவில் இருக்கும். அந்த வட்ட வடிவத்தில் அனைத்து இடங்களிலும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கும். அதன் மூலம் மின் ஒளியானது மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரே அளவில் சமநிலையில் இருக்கும்.
ஆனால், இதுதான் வீரர்கள் கேட்சுகளை நழுவ விடுவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது என சிலர் கூறுகின்றனர். அந்த மின்விளக்குகள் குறிப்பிட்ட கோணத்தில் இருந்து ஒரு வீரர் பார்க்கும்போது அவரது பார்வையை மறைப்பதற்கு அல்லது கவனத்தை சிதற செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதற்கு முன் அந்த மைதானத்தில் பல போட்டிகளில் கேட்சுகள் இவ்வாறு நழுவிப் போயுள்ளன எனவும் கூறுகின்றனர். கடந்த ஆண்டு மகளிர் டி20 உலக கோப்பையின் பல போட்டிகள் இந்த மைதானத்தில் தான் நடைபெற்றன. அந்தத் தொடரில் துபாய் மைதானத்தில் மட்டும் 20 போட்டிகள் நடந்தன. அதில் மட்டும் 88 கேட்சுகள் நழுவ விடப்பட்டன. ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் 8 கேட்சுகளை நழுவ விட்டிருந்தது.
இந்திய அணி இதே மைதானத்தில் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாட உள்ள நிலையில், இது இந்திய அணியின் ஃபீல்டிங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் இந்திய அணிக்கு எதிராக ஆடும் அணிகளுக்கும் இது சிக்கலை ஏற்படுத்தும். எனவே, இந்த மின்விளக்குகள் போட்டியின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்திய அணி அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக பிப்ரவரி 23 அன்று விளையாட உள்ளது. அந்தப் போட்டியும் இதே துபாய் சர்வதேச மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.