அகமதாபாத்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் பும்ரா, சிராஜ், குல்தீப், ஹர்திக் மற்றும் ஜடேஜா உள்ளிட்ட 5 வீரர்களும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் இந்திய அணிக்கு 192 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி முதல் ஓவரை வீசினார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும், ஷாகின் அப்ரிடிக்கு எதிராகவும் ரோகித் சர்மா அதிகமாக திணறியுள்ளார்.
ஏற்கனவே டி20 உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடரில் ரோகித் சர்மாவை ஷாகின் அப்ரிடி வீழ்த்தியுள்ளார். இதனால் முதல் ஓவரிலேயே ஆட்டத்தின் மீதான பரபரப்பு எகிறியது. ஆனால் முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசி ரோகித் சர்மா அட்டாக்கை தொடங்கினார். பின்னர் ஹசன் அலி ஓவரில் இரு பவுண்டரிகளை விளாச, தொடர்ந்து ஷாகின் அப்ரிடி வீசிய 7வது ஓவரில் ஒரு சிக்சரை விளாசி ஆச்சரியப்படுத்தினார்.
ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 7 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. திடீரென ஸ்பின்னரான முகமது நவாஸை அட்டாக்கில் கொண்டு வந்தார் பாபர் அசாம். அவர் பந்திலும் ஒரு சிக்சரை விளாச, தொடர்ந்து ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் ஓவரிலேயே இரு அபார சிக்சர்களை விளாசினார் ரோகித் சர்மா.

இந்த சிக்சர்கள் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை இவருக்கு முன்பாக ஷாகித் அப்ரிடி 351 சிக்சர்களுடன் முதலிடத்திலும், 331 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் இரண்டாவது இடத்திலும் உள்ளார். அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையை ரோகித் சர்மா முறியடித்தது குறிப்பிடத்தக்கது.