அகமதாபாத்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சோலோவாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்தப் போட்டியில் வெற்றிபெற பாகிஸ்தான் அணி தரப்பில் 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே கேப்டன்சியில் அசத்திய ரோகித் சர்மா, மீண்டும் தொடக்க வீரராக சுப்மன் கில்லுடன் களமிறங்கினார்.

ஷாகின் அப்ரிடி பந்தில் பவுண்டரி விளாசி ரோகித் சர்மா கணக்கை தொடங்கிய நிலையில், மறுபக்கம் சுப்மன் கில் இரண்டாவது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி தனது கம்பேக்கை அறிவித்தார். ஆனால் 3வது ஓவரில் சுப்மன் கில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், பின்னர் ரோகித் சர்மா - விராட் கோலி இணை கூட்டணி சேர்ந்தது. இருவரும் இணைந்து அதிரடியாக ரன்களை சேர்க்க தொடங்கினர். தொடர்ந்து ஷாகின் அப்ரிடி பந்தில் ரோகித் சர்மா சிக்சர் அடிக்க, இன்னொரு பக்கம் விராட் கோலி 3 பவுண்டரிகளை விளாசினார்.
இதனால் 7 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து விக்கெட் எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தவறான முடிவுகளை எடுத்தார். திடீரென முகமது நவாஸை அட்டாக்கில் கொண்டு வந்தது, ரோகித் சர்மா அதிரடியாக ரன்கள் சேர்க்க உதவியாக அமைந்தது. பின்னர் ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் இரு சிக்சர்களை அடிக்க, 36 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் ரோகித் சர்மா.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பவுலர்களை வெளுத்து கட்டிய ரோகித் சர்மா, ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்சராக விளாசி சிதறடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 63 பந்துகளில் 6 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 86 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 8 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள், 4 அரைசதங்களை விளாசியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதத்தை விளாசிய நிலையில், தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக அரைசதம் விளாசியுள்ளார். கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக மட்டுமே ரோகித் சர்மாவை அதிரடியாக விளையாடுவார் என்று சில ரசிகர்கள் கிண்டல் செய்து வந்த நிலையில், முக்கியமான போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை ஆடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.