IND vs PAK: வைபவ் சூர்யவன்ஷியை கிண்டல் செய்து அடி வாங்கி அசிங்கப்பட்ட பாகிஸ்தான் வீரர் சயிம்
நிஷின்: இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை கிண்டல் செய்த பாகிஸ்தான் வீரர் அடுத்த சில ஓவர்களிலேயே பல சொதப்பல்களை செய்து அவமானப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆண்கள் கிரிக்கெட்டின் தங்கப் பதக்க இறுதிப்போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 211 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 192 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த இறுதிப்போட்டியில், 15 வயதான இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியை 'தொட்டில் ஆட்டி' குழந்தை என கிண்டலடித்த பாகிஸ்தான் வீரர் சயிம் அயூப், அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய பேட்டர்களிடம் சரமாரியாக அடி வாங்கி, பீல்டிங்கிலும் அடுத்தடுத்து 2 கேட்ச்களை தவறவிட்டு மைதானத்திலேயே அசிங்கப்பட்டு நின்ற சம்பவம் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

வைபவை கிண்டலடித்த சயிம் அயூப்
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி 2 சிக்சர்களுடன் 15 ரன்கள் எடுத்திருந்த போது, 3வது ஓவரை சயிம் அயூப் வீசினார். வைபவ் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் கேட்ச் பிடித்தார். வைபவ் அவுட் ஆனதும், அவரை நோக்கி சயிம் அயூப் கைகளை தொட்டில் போல ஆட்டி, 'நீ ஒரு சின்ன குழந்தை' என்பதைப் போல கிண்டலாகக் கொண்டாடி வம்புக்கு இழுத்தார்.
சயிம் அயூப்பின் இந்த அநாகரீக கேலிக்கு மறுமுனையில் நின்ற அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா உடனடியாக பேட்டாலேயே மரண அடி கொடுத்தார். அடுத்த ஓவரில் சயிம் அயூப் வீசிய பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்ட அபிஷேக் சர்மா, தொடர்ந்து 6, 4, 4 என சரமாரியாக விளாசித் தள்ளினார். சயிம் அயூப்பின் ஒரே ஓவரில் 15 ரன்களை குவித்து அவரது பந்துவீச்சை துவம்சம் செய்தார். இறுதியில் சயிம் அயூப் 4 ஓவர்களில் 47 ரன்களை வாரி வழங்கி பரிதாபமாக நின்றார்.
ஒரே ஓவரில் 2 கேட்ச்களை தவறவிட்ட கொடுமை!
பந்துவீச்சில் அடி வாங்கியது போதாதென்று, பீல்டிங்கிலும் சயிம் அயூப் செய்த மெகா சொதப்பல் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
அராபத் மின்ஹாஸ் வீசிய 5வது ஓவரில், அபிஷேக் சர்மா தூக்கி அடித்த கேட்ச் டீப் மிட்-விக்கெட் திசையில் காற்றில் பறந்தது. அங்கு ஓடிவந்த சயிம் அயூப், டைவ் அடித்து பந்தை கையில் பிடித்தும் கீழே தவறவிட்டார்.
அதே ஓவரில் அடுத்ததாக இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தூக்கி அடித்த பந்தையும் சயிம் அயூப் மீண்டும் முன்னோக்கி ஓடிவந்து டைவ் அடித்து தவறவிட்டு அதிர்ச்சி அளித்தார். ஒரே ஓவரில் அபிஷேக் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய கேட்ச்களையும் சயிம் அயூப் அடுத்தடுத்து நழுவவிட்டது பாகிஸ்தான் அணிக்கு பேரிடியாக அமைந்தது.
தங்கப் பதக்கம் வென்று இந்தியா பதிலடி
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 61 ரன்களும், திலக் வர்மா 51* ரன்களும் விளாச, இந்தியா 211 ரன்களை குவித்தது. பின்னர் பேட்டிங்கில் களமிறங்கிய சயிம் அயூப் 22 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து சிவம் துபே பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 192 ரன்களுக்கு சுருண்டு 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெள்ளி மட்டுமே வென்றது.
வைபவ் சூர்யவன்ஷியை கிண்டலடித்த சயிம் அயூப், பேட்டிங்கிலும் அடி வாங்கி, பீல்டிங்கிலும் சொதப்பி, போட்டியிலும் தோற்று தலைகுனிந்து நின்றதை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

