IND vs PAK: இந்தியாவிடம் தோல்வி.. நீ பவுலரா? சொந்த மருமகனையே கிழித்து தொங்கவிட்ட ஷாஹித் அஃப்ரிடி
துபாய்: இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி சந்தித்த படுதோல்வி மற்றும் அதைத் தொடர்ந்த 'கைகுலுக்கல் சர்ச்சை' கிரிக்கெட் உலகில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. ஆனால், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, இந்த சர்ச்சைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, களத்தில் தனது அணி வெளிப்படுத்திய படுமோசமான ஆட்டம் குறித்து, குறிப்பாக தனது சொந்த மருமகனான ஷஹீன் அஃப்ரிடியை குறிப்பிட்டு சரமாரியாக விளாசியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை 127 ரன்களுக்குச் சுருட்டினர். பின்னர், இந்திய அணி 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மருமகனை விளாசிய அஃப்ரிடி:
பாகிஸ்தானின் பேட்டிங் சரிந்தபோது, பந்துவீச்சாளரான ஷஹீன் அஃப்ரிடி 16 பந்துகளில் 33 ரன்கள் விளாசி, அந்த அணி 100 ரன்களைக் கடக்க உதவினார். ஷஹீனின் இந்த ஆட்டம் இல்லையென்றால், பாகிஸ்தான் இரட்டை இலக்க ஸ்கோரில் ஆட்டமிழந்திருக்கும் என்று ஷாஹித் அஃப்ரிடியே ஒப்புக்கொண்டாலும், தனது மருமகனின் பந்துவீச்சில் அவர் அதிருப்தி அடைந்து பேசி இருக்கிறார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஷாஹித் அஃப்ரிடி கூறியதாவது "நல்லவேளையாக, ஷஹீன் சில ரன்களை அடித்தார், அது பாகிஸ்தான் அணி 100 ரன்களைக் கடக்க உதவியது. ஆனால், எனக்கு ஷஹீனிடம் இருந்து ரன்கள் தேவையில்லை, எனக்கு ஷஹீனிடம் இருந்து பந்துவீச்சுதான் வேண்டும். எனக்கு சயிம் அயூப்பிடம் இருந்து பந்துவீச்சு தேவையில்லை, அவரிடம் இருந்து ரன்கள் தான் வேண்டும். ஷஹீன் தனது முதன்மைப் பணி, புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுப்பது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் தனது ஆட்டத் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்."
"ஷஹீன் மனரீதியாக பலமாக இருக்க வேண்டும், அவரால் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அவர் தனது பந்துவீச்சால் பாகிஸ்தானுக்கு போட்டியை வென்று கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று அவர் மேலும் கூறினார்.
"நாங்கள் விளையாடுவது மூன்றாம் தர கிரிக்கெட்":
ஷஹீனை மட்டுமல்ல, பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கிரிக்கெட் அமைப்பையுமே ஷாஹித் அஃப்ரிடி கடுமையாகச் சாடினார். "பாகிஸ்தானின் முதல் தர கிரிக்கெட் அமைப்பு 'மூன்றாம் தரத்தில்' உள்ளது" என்று அவர் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உள்நாட்டு கிரிக்கெட்டில் முதலீடு செய்து, வீரர்களை சர்வதேசப் போட்டிகளின் சவால்களுக்குத் தயார்படுத்த வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
ஒட்டுமொத்த உலகமும் கைகுலுக்கல் சர்ச்சையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஷாஹித் அஃப்ரிடி தனது அணியின் அடிப்படைத் திறமையின்மை மற்றும் அமைப்பு ரீதியான சிக்கல்களைப் பற்றிப் பேசியிருப்பது, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிலவும் ஆழமான பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications