IND vs PAK U19: "டாடி ஹண்ட்ரட்" அடித்த பாகிஸ்தான் வீரர்.. இந்திய அண்டர் 19 வீரர்கள் சொதப்பல் ஆட்டம்
துபாய்: அண்டர் 19 ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் ஷாஜயிப் கான் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அதன் காரணமாக பாகிஸ்தான் அண்டர் 19 அணி 281 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அண்டர் 19 அணி சேஸிங் செய்ய முடியாமல் திணறியது.
2024 அண்டர் 19 ஆசிய கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பலரும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் அண்டர் 19 அணிகள் மோதிய போட்டி இன்று நடைபெற்றது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ஷாஜயிப் கான் மற்றும் உஸ்மான் கான் திட்டமிட்டு நிதானமாக ஆடினர்.

முதல் 20 ஓவர்களில் 87 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது இந்த ஜோடி. பின்னர் இருவரும் வேகம் எடுத்து ரன் சேர்த்தனர். 30.4 ஓவர்கள் வரை முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. உஸ்மான் கான் 94 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஷாஜயிப் கான் சதம் கடந்தார். அத்துடன் ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதும் கடைசி ஓவரின் முதல் பந்து வரை தாக்குப் பிடித்து நின்ற ஷாஜயிப் கான் சதம் கடந்து 147 பந்துகளில் 159 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 10 சிக்ஸ், 5 ஃபோர் அடித்து இருந்தார். அவரது திட்டமிட்ட ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது.
இந்திய அணிக்கு 282 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாயில் இந்த இலக்கை எட்டுவது கடினம் என்ற நிலையில், இந்திய அண்டர் 19 வீரர்கள் துவக்கத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறினர். வைபவ் சூர்யவன்ஷி 1 ரன் எடுத்த நிலையிலும், ஆயுஷ் மாத்ரே 20 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஆண்ட்ரே சித்தார்த் 15 ரன்கள் எடுத்தும், கேப்டன் முகமது அமான் 43 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 81 ரன்கள் எடுத்து 4 விக்கெட்களை இழந்தது. அதன் பின் நிகில் குமார், கிரண் இணைந்து கூட்டணி அமைத்து ரன் சேர்த்தனர். ஆனால், இந்திய அணி 21 ஓவர்களில் 153 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.


Click it and Unblock the Notifications