கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நாளை நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சு வியூகத்தைத் தகர்க்கப் போவதே சிவம் துபேதான் எனக் கூறுகின்றனர் விமர்சகர்கள். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிவம் துபே மிடில் ஆர்டரில் சுழற்பந்துவீச்சை அடித்து ஆடுவதற்கு என்றே தன்னை தயார் செய்து கொண்டு ஆடி வருகிறார்.
அதே பணியைத்தான் அவர் இந்திய அணியிலும் மேற்கொண்டு வருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய ஆட உள்ள போட்டி கொழும்பில் நடைபெற உள்ளது. அந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளிப்பதே இந்தியாவின் வெற்றியின் திறவுகோலாக இருக்கும்.

பாகிஸ்தான் அணி இந்த முறை முழுமையாகச் சுழற்பந்து வீச்சை நம்பியே களமிறங்குகிறது. அணியில் அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக், முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் என நான்கு முக்கியச் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதுபோக பகுதிநேர பந்துவீச்சாளராகச் சயிம் அயூப்பும் உள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியில் உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் 5 சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தப் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்காகக் கடுமையான வலைப்பயிற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் இந்தச் சுழல் வியூகத்தை உடைக்க இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கையில் வைத்திருக்கும் ஆயுதம் சிவம் துபே. இடதுகை பேட்ஸ்மேனான இவர், சுழற்பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்குவதில் வல்லவர். குறிப்பாக நடு ஓவர்களில் களமிறங்கி ரன் வேகத்தை உயர்த்துவதே இவரின் பணி.
இந்த ஆண்டு சிவம் துபே மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளார். கடந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். 2026ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 13 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஆடுகளம் எவ்வளவு மெதுவாக இருந்தாலும், பந்தை மைதானத்திற்கு வெளியே அடிக்கும் ஆற்றல் இவரிடம் உள்ளது.
சுழற்பந்து வீச்சுக்கு எதிராகச் சிவம் துபேவின் வளர்ச்சி அபரிமிதமானது. 2019ஆம் ஆண்டில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராகத் திணறிய அவர், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளார். 2026ஆம் ஆண்டில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இவரது ஸ்ட்ரைக் ரேட் 286.4 ஆக உள்ளது. இது இவரது கிரிக்கெட் வாழ்க்கையிலேயே அதிகபட்சமாகும்.
இந்த ஆண்டு சுழற்பந்து வீச்சில் இவர் சந்தித்த வெறும் 22 பந்துகளில் 7 சிக்ஸர்களைப் பறக்கவிட்டுள்ளார். டாட் பால் சதவீதம் வெறும் 9.1 மட்டுமே. அதாவது சுழற்பந்து வீச்சில் இவர் அதிக பந்துகளை வீணடிப்பதே இல்லை.
பாகிஸ்தானின் புதிய கண்டுபிடிப்பான உஸ்மான் தாரிக் மற்றும் அப்ரார் அகமது ஆகியோருக்குச் சிவம் துபே சிம்மசொப்பனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உஸ்மான் தாரிக்கின் வித்தியாசமான பந்துவீச்சு முறையோ, அப்ரார் அகமதுவின் கூக்ளியோ சிவம் துபேவின் அதிரடிக்கு முன்னால் எடுபடாது என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.