Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: “பாகிஸ்தான் தோல்விக்கு காரணமே இவர்தான்”.. கேப்டனை பொளந்த சோயிப் அக்தர்.. என்ன சொன்னார்?

துபாய்: இந்திய அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் சோயிப் அக்தர், கேப்டன் சல்மான் ஆகா, பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் மற்றும் அணி நிர்வாகத்தை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். கேப்டன் சல்மான் ஆகாதான் அணியின் மிகப்பெரிய பலவீனம் என்றும், அவருக்கு அணியில் இடமளிக்கவே தகுதியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அடுத்த ஐந்து ஓவர்களில் வெறும் 28 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. இதுவே போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது என்று சுட்டிக்காட்டியுள்ள அக்தர், இந்த சரிவுக்கு தவறான அணித் தேர்வும், பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் தவறான முடிவுகளுமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

IND vs PAK Shoaib Akhtar Outraged by Pakistan s Defeat points out Captain Salman Agha as weakest link

இது பற்றி அக்தர் கூறியதாவது: "பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். கேப்டனைப் பொறுத்தவரை, அவருக்கு எதுவுமே தெரியவில்லை. அவர் எதற்காக கேப்டனாக இருக்கிறார், அணியில் எதற்காக விளையாடுகிறார் என்பதே புரியவில்லை. அவர்தான் இந்த அணியின் பலவீனமான புள்ளி.

அவர் விளையாடும் இடத்திற்கு அவருக்குத் தகுதி இருக்கிறதா? இதை யாரும் கேட்க மாட்டார்கள். மிடில் ஆர்டரில் அவர்தான் பலவீனமான வீரர். அவர் அணிக்கு என்ன செய்கிறார்? சொல்லுங்கள்? ஆறாவது இடத்தில் களமிறங்குகிறார். அதே இடத்தில் இந்தியாவுக்கு ஹர்திக் பாண்டியா அல்லது திலக் வர்மா வருகிறார்கள். ஒப்பிட்டுப் பாருங்கள். அவர் ஒரு நல்ல பையனாக இருக்கலாம், ஆனால் ஒரு வீரராக அணிக்கு அவரது பங்களிப்பு என்ன?" என்று அக்தர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து அணித் தேர்வு குறித்துப் பேசிய அக்தர், "முதலில் அணித் தேர்வே தவறு. 10 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 15 ஓவர்களில் 140 ரன்களையும், இறுதியில் 200 ரன்களையும் எட்டியிருக்க வேண்டும். அந்த அளவிற்கு பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. அந்த நேரத்தில் ஒரு அனுபவ வீரர் இருந்திருக்க வேண்டும். ஹுசைன் தலாத் களமிறங்கி ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்துவிட்டார் (11 பந்துகளில் 10 ரன்கள்). முகமது நவாஸ் 19 பந்துகள் விளையாடி 'ரன்-அவுட்' ஆனார். ஹசன் நவாஸ் போன்ற அதிரடி வீரரை அணியில் எடுத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

ஷஹீன் அப்ரிடி, அபிஷேக் ஷர்மா-வுக்குப் பந்துவீசிய விதம் குறித்தும் அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "அபிஷேக்கிற்கு இரண்டு முனைகளில் இருந்தும் நல்ல 'பவுன்சர்களை' வீசியிருக்க வேண்டும். முதல் பந்தையே 'லெந்தில்' வீசி, அவரை முன்பக்கமாக ஆடவைத்து வீழ்த்தியிருக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேனை முன்பக்க ஆட்டத்தில் தான் வீழ்த்த முடியும். முதல் பவுன்சரே தவறாக வீசப்பட்டது, அதன்பிறகு பவுன்சரை முயற்சிக்கவே இல்லை" என்று பந்துவீச்சு வியூகத்தையும் அவர் விமர்சித்தார்.

இறுதியாக, "கேப்டனுக்கு அணியில் இடமளிக்கத் தகுதியில்லை. அவரும் பயிற்சியாளரும் சேர்ந்து தவறான அணித் தேர்வை மேற்கொள்கிறார்கள். இந்தத் தோல்விக்கு முழுப் பொறுப்பும் அணி நிர்வாகத்தையே சாரும்" என்று சோயிப் அக்தர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

Story first published: Monday, September 22, 2025, 15:37 [IST]
Other articles published on Sep 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+