நியூயார்க் : இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியில் சிவம் துபேவின் ஃபீல்டிங் செயல்பாடு மிக மோசமாக இருந்தது. முன்னதாக அவர் பேட்டிங்கிலும் சொதப்பி இருந்தார். இந்த நிலையில் ஃபீல்டிங்கில் முக்கியமான பாகிஸ்தான் வீரரின் கேட்சை தவறவிட்டார் சிவம் துபே.
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் தேவையற்ற ஷாட்களை ஆடி கேட்ச் கொடுத்து விக்கெட்களை பறி கொடுத்து வந்தனர். சுழற் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்வார் என்ற நம்பிக்கையில் சிவம் துபேவை இந்திய அணியில் சேர்த்து இருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா.

ஆனால், சிவம் துபே, பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் இமாத் வாசிம் பந்து வீச்சில் ரன் எடுக்க முடியாமல் திணறினார். அத்துடன் 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அதனால் ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வந்தனர். இதற்கிடையே இந்திய அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து 120 ரன்கள் என்ற மிகச்சிறிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி சேஸிங் செய்ய துவங்கியது.
இரண்டு ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது. மூன்றாவது ஓவரை பும்ரா வீசினார். அவரை நம்பியே இந்திய அணி இருந்தது. எதிர்பார்த்தது போலவே அந்த ஓவரின் நான்காவது பந்தில் முகமது ரிஸ்வான் ஒரு கேட்ச் கொடுத்தார். பவுண்டரி எல்லையில் நின்று இருந்த சிவம் துபே நோக்கி பந்து வந்தது. அவரது கைகளுக்கே வந்த கேட்ச்சை தவறவிட்டார் அவர். அதை பார்த்து பும்ரா நொந்து போனார். ரசிகர்களும் உறைந்து போனார்கள்.
பின்னர் முகமது ரிஸ்வான் இந்த போட்டியில் 31 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இடையே அதிக ரன்கள் சேர்த்தவர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிவம் துபே அந்த கேட்ச்சை பிடித்து அவரது விக்கெட்டை வீழ்த்த உதவி இருந்தால் அப்போதே பாகிஸ்தான் அணியின் நிலை கவலைக்கிடமாக மாறி இருக்கும்.
ஆனால், ரிஸ்வான் பேட்டிங் காரணமாக கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்ற பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.