துபாய்: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகப் பெரிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வரும் 15ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் மோதுகின்றன. இலங்கையின் கொழும்பு நகரில் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளும் நடப்பு தொடரில் தங்களின் மூன்றாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளன.
குரூப் ஏ பிரிவைச் சேர்ந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், இதுவரை விளையாடிய தலா இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, தலா 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்த முக்கிய போட்டி, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், பெரும் ரசிகர் பட்டாளம் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய எட்டு போட்டிகளில் ஏழு வெற்றிகளைப் பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நடப்பு சாம்பியனான இந்தியா, டி20 உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்றுள்ளது.
மறுபுறம், ஒரு பெரிய போட்டித்தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை நிகழ்வுகளில் இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய பாகிஸ்தான் அணி தீவிரமாக உள்ளது.
கடந்த ஐந்து டி20 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அனைத்து போட்டிகளிலும் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த டி20 சர்வதேச போட்டிகளில், 2007 செப்டம்பர் 14 அன்று டர்பனில் முதல் முறையாக மோதியதிலிருந்து, இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 16 போட்டிகளில் 13ல் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
டி20 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தானின் கடைசிக் வெற்றி, 2022 செப்டம்பர் 4 அன்று துபாயில் இந்தியாவுக்கு எதிராக பெற்றது. கடந்த கால முடிவுகள் எப்படி இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒரு பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை டி20 உலகக் கோப்பையில் மோதிய எட்டு போட்டிகளில் படைக்கப்பட்ட முக்கிய சாதனைகள் தற்போது பார்க்கலாம்.
அதிக வெற்றிகள்: இந்திய அணி 8 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்ச ஸ்கோர்: 2022 அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்திய அணி 20 ஓவர்களில் 160/6 ரன்கள் எடுத்தது. குறைந்தபட்ச ஸ்கோர்: 2024 ஜூன் 9 அன்று நியூயார்க்கில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 113/7 ரன்கள். அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: 2024 ஜூன் 9 அன்று நியூயார்க்கில் இந்தியா பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி: 2022 அக்டோபர் 24 அன்று துபாயில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றியாகும். அதிக ரன்கள்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (ஆறு போட்டிகளில் 312 ரன்கள்) இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: 2022 அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் விராட் கோலி 53 பந்துகளில் 82* ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
அதிகபட்ச சராசரி: இந்தியாவின் விராட் கோலி (156.00). அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் (குறைந்தபட்சம் 25 பந்துகள் எதிர்கொண்டவர்கள்): பாகிஸ்தானின் இம்ரான் நசீர் (177.77). அதிக அரை சதங்கள்: இந்தியாவின் விராட் கோலி (ஆறு போட்டிகளில் 4 அரை சதங்கள்). அதிக டக்குகள் (பூஜ்ய ரன்கள்): இந்தியாவின் கௌதம் கம்பீர் (மூன்று போட்டிகளில் 2 பூஜ்யங்கள்).
அதிக சிக்ஸர்கள்: இந்தியாவின் விராட் கோலி (ஆறு போட்டிகளில் 9 சிக்ஸர்கள்). ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்: விராட் கோலி (இந்தியா, 2022), மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான், 2007) மற்றும் இஃப்திகார் அஹ்மத் (பாகிஸ்தான், 2022) ஆகியோர் தலா 4 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். அதிக விக்கெட்டுகள்: ஹாரிஸ் ரவுஃப் (பாகிஸ்தான்), இர்ஃபான் பதான் மற்றும் ஹர்திக் பாண்டியா (இந்தியா) ஆகியோர் தலா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இப்பட்டியலில் உள்ளனர்.
சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள்: 2007 செப்டம்பர் 14 அன்று டர்பனில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானின் முகமது ஆசிப் 4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.விக்கெட் கீப்பராக அதிக 'டிஸ்மிசல்கள்': இந்தியாவின் எம்.எஸ். தோனி (ஐந்து போட்டிகளில் 7 - இதில் 6 பிடிப்புகள் மற்றும் ஒரு ஸ்டம்பிங்). அதிக கேட்சுகள்: இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (மூன்று போட்டிகளில் 5 கேட்சுகள்).
அதிகபட்ச பார்ட்னர்ஷிப்: 2022 அக்டோபர் 24 அன்று துபாயில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) முதல் விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தனர். அதிக போட்டிகள்: இந்தியாவின் ரோஹித் சர்மா (7 போட்டிகள்). கேப்டனாக அதிக போட்டிகள்: இந்தியாவின் எம்.எஸ். தோனி (5 போட்டிகள்). கேப்டனாக அதிக வெற்றிகள்: இந்தியாவின் எம்.எஸ். தோனி (5 வெற்றிகள்).