Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: "நம்பாதீங்க.. இந்திய ஊடகங்கள் சொல்வது எல்லாமே பொய்".. மீண்டும் பாகிஸ்தான் பல்டி

லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பது தொடர்பாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவல்களைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடியோடு மறுத்துள்ளது. இந்திய ஊடகங்கள் கற்பனைக் கதைகளைச் செய்திகளாகப் பரப்பி வருவதாகப் பாகிஸ்தான் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

வரும் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டியில் விளையாடத் தங்கள் நாட்டு அணிக்கு அனுமதி இல்லை எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.

IND vs PAK T20 World Cup 2026 PCB Denies Secret Talks with ICC Over India Match Boycott Controversy

பரவிய தகவல் என்ன?

ஐசிசி விதிமுறைகளை மீறிப் போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் அபராதம் விதிக்கப்படும் என்றும், சட்டரீதியான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஐசிசி எச்சரித்ததாகக் கூறப்பட்டது. இந்த எச்சரிக்கைக்குப் பயந்து, பாகிஸ்தான் வாரியம் ஐசிசியுடன் ரகசியப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகவும், ஒரு சுமுகமான தீர்வை நோக்கிச் செல்வதாகவும் செய்திகள் வெளியாகின. ஏஎஃப்பி (AFP) போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்களும் இதை உறுதிப்படுத்தியிருந்தன.

பாகிஸ்தான் வாரியத்தின் மறுப்பு

இந்நிலையில், இந்தத் தகவல்கள் அனைத்தும் பொய் எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் அமீர் மிர் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், "பாகிஸ்தான் வாரியம் ஐசிசியை அணுகியதாகப் பிரபல இந்திய விளையாட்டு பத்திரிகையாளர் கூறியுள்ள கருத்தை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். வழக்கம் போல இந்திய ஊடகங்கள் கற்பனைக் கதைகளைப் பரப்புவதில் மும்முரமாக உள்ளன. கொஞ்சம் பொறுத்திருங்கள். யார் யாருடைய கதவைத் தட்டினார்கள் என்பது காலப்போக்கில் தெளிவாகத் தெரியும்" என்று அவர் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

தொடரும் குழப்பம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, ஐசிசியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் அதை மறுத்திருப்பது குழப்பத்தை அதிகரித்துள்ளது. மறுபுறம், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், "நாங்கள் திட்டமிட்டபடி கொழும்பு செல்வோம். அங்கு விளையாடத் தயாராக இருக்கிறோம்" என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.

பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணித்தால், அந்தப் போட்டிக்கான இரண்டு புள்ளிகள் குறைக்கப்படுவதோடு, ரன் ரேட் அடிப்படையிலும் பாகிஸ்தான் அணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும்.

ஐசிசியுடன் பேசவில்லை என்று பாகிஸ்தான் கூறுவதால், அவர்கள் தங்கள் புறக்கணிப்பு முடிவில் உறுதியாக இருக்கிறார்களா அல்லது இதுவும் ஒரு வகையான நாடகமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Sunday, February 8, 2026, 12:07 [IST]
Other articles published on Feb 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+