IND vs PAK: 5 மணிக்கு நடக்கப் போகும் சம்பவம்.. மேட்ச் நடக்குமா என்பதே இதை வைத்துதான் இருக்கு!
கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இன்று (பிப்ரவரி 15) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தாலும், மழைக்கு இடையே போட்டி முழுமையாக நடக்குமா? என்பதுதான் தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.
அரசியல் காரணங்கள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாட சம்மதித்தது. ஆனால் தற்போது இயற்கை, போட்டிக்குத் தடையாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக மாலை 5 மணியை இலங்கை வானிலை மையம் சுட்டிக்காட்டி இருக்கிறது.

மிரட்டும் மழை
இன்று காலை நிலவரப்படி கொழும்பில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இலங்கை வானிலை ஆய்வு மைய தகவலின்படி மழை பெய்வதற்கான வாய்ப்பு 90 சதவீதம் வரை உள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகக் கொழும்பு நகரில் மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றின் ஈரப்பதம் 90 சதவீதத்தைத் தொட்டுள்ளது.
மாலை நேரத்தில் சிக்கல்
வானிலை அறிக்கையின்படி, மாலை 5 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. போட்டி தொடங்குவதற்குச் சற்று முன்பாக மழை பெய்யக்கூடும் என்பதால், மைதானம் ஈரமாக இருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை நின்றாலும், மைதானத்தைச் தயார் செய்வதில் தாமதம் ஏற்படலாம். இதனால் டாஸ் போடுவதில் காலதாமதம் ஆகலாம் அல்லது ஓவர்கள் குறைக்கப்படலாம்.
மாலை 5 மணிக்கு எத்தனை பெரிய மழை பெய்யப் போகிறது என்பதை வைத்துத் தான் இந்தப் போட்டி குறிப்பிட்ட நேரத்தில் துவங்குவதை முடிவு செய்ய முடியும். இருப்பினும், இரவு நேரத்தில் வானம் ஓரளவு தெளிவாக இருக்கும் என்றும், வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே மழை குறுக்கிட்டாலும் போட்டி முழுமையாக ரத்தாகாமல், குறைக்கப்பட்ட ஓவர்களுடனாவது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடுகளம் எப்படி?
வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் கொழும்பு ஆடுகளம் இன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்யவே விரும்பும். பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் நிதானமாக விளையாடுவது அவசியம்.
இந்திய அணியின் எதிர்பார்ப்பு
மழை ஒருபுறம் இருக்க, இந்திய அணியில் சில கவலைகளும் உள்ளன. வயிற்றுத் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அவர் களமிறங்கினால் இந்திய அணியின் பலம் கூடும். அதேபோல, பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க இந்திய நடுவரிசை பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications