கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக, ஒரு முக்கிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக டாஸ் போடும்போது, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுக்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுடுக்க மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று சமபலத்துடன் மோதுகின்றன. இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்த "கைகுலுக்க மறுக்கும் சர்ச்சை" பூதாகரமாகியுள்ளது.

இந்த 'கைகுலுக்காமை' கொள்கை புதிதல்ல. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தொடரிலிருந்தே இந்திய அணி இதைக் கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தானுடன் தொடர்புடைய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' ஆகியவற்றிற்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் உறவுகள் மோசமடைந்தன. இதன் காரணமாகவே, பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்க்க இந்திய அணி முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து சூர்யகுமார் யாதவிடம் கேட்டபோது, அவர் மர்மமாகப் பதிலளித்தார். "24 மணி நேரம் பொறுத்திருங்கள். நன்றாகச் சாப்பிட்டு, நன்றாகத் தூங்குங்கள். நாளை பார்ப்போம்" என்று கூறி கை குலுக்குவோமா, இல்லையா என நேரடியாக சொல்ல மறுத்தார்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா இதுகுறித்து பேசுகையில், "விளையாட்டை அதன் உண்மையான உணர்வோடு விளையாட வேண்டும். கைகுலுக்குவதா வேண்டாமா என்பதை அவர்கள்தான் (இந்தியா) முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்தியாவின் இந்த முடிவு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. ஏனெனில், சில வாரங்களுக்கு முன்புதான், வங்கதேச அணி உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து, ஐசிசி, பிசிசிஐ மீது இரட்டை நிலைப்பாடு குற்றச்சாட்டை முன்வைத்து, இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் மிரட்டியது.
பின்னர் ஐசிசியுடன் நடந்த தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகே பாகிஸ்தான் விளையாடச் சம்மதித்தது. ஏற்கனவே இருதரப்பு உறவில் விரிசல் உள்ள நிலையில், இந்த 'கைகுலுக்காமை' விவகாரம் இந்த உலகக்கோப்பை போட்டியின் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. டாஸின் போது நடக்கும் இந்த ஒரு செயல், ஒட்டுமொத்த போட்டியின் போக்கையும் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.