Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: பாகிஸ்தான் போட்ட 'ஃபோர்ஸ் மஜூர்' நாடகம் அம்பலம்.. இந்தியா - பாக். போட்டிக்கு வாய்ப்பு?

துபாய்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கிவிட்டாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று புறக்கணிப்பு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான், தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இதனால், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தப் போட்டி மீண்டும் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒரு மெல்லிய நம்பிக்கை கீற்று உருவாகியுள்ளது.

'ஃபோர்ஸ் மஜூர்' நாடகம்

முன்னதாக, பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), ஐசிசிக்கு ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பியது. அதில், தங்கள் கட்டுப்பாட்டை மீறிய, தவிர்க்க முடியாத காரணங்களால் (Force Majeure) போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கு ஆதாரமாகத் தங்கள் நாட்டு அரசின் பொது அறிவிப்பையும் இணைத்திருந்தது.

Ind vs Pak T20 World Cup 2026 Will the India - Pakistan match Happen ICC Pushes PCB for a Final Answer

ஐசிசியின் கிடுக்கிப்பிடி கேள்விகள்

பாகிஸ்தானின் இந்த வாதத்தை ஐசிசி அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, சட்டரீதியான சில கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பி பாகிஸ்தானுக்கு செக் வைத்துள்ளது. "ஒரு தொடரில் மற்ற அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்கும்போது, ஒரே ஒரு போட்டியை மட்டும் புறக்கணிக்க இந்தச் சட்டப் பிரிவை எப்படிப் பயன்படுத்த முடியும்?"

"இந்த அசாதாரணச் சூழலைத் தவிர்ப்பதற்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னென்ன மாற்று முயற்சிகளை எடுத்தது? அரசின் முடிவை மாற்ற ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?"

"இந்த சட்டப் பிரிவைத் தவறாகப் பயன்படுத்தினால் ஏற்படும் சட்ட மற்றும் வர்த்தக ரீதியான விளைவுகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, பாகிஸ்தானின் வாதத்தில் உள்ள ஓட்டைகளை ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

இறங்கி வந்த பாகிஸ்தான்

ஐசிசியின் இந்த உறுதியான மற்றும் சட்டரீதியான அணுகுமுறையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இறங்கி வந்துள்ளது. ஐசிசியின் கேள்விகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் வாரியமே தற்போது ஐசிசியுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு தீர்வைக் காணும் நோக்கில் நடைபெற்று வருவதாக ஐசிசி அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, இலங்கை கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானுக்குக் கடிதம் எழுதி, இந்தப் போட்டி ரத்தானால் ஏற்படும் பொருளாதார இழப்புகளைச் சுட்டிக்காட்டி, முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியிருந்தது. இதுவும் பாகிஸ்தானுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஒரு உலகக்கோப்பை போட்டியின் வர்த்தக மதிப்பு மட்டும் சுமார் 2,200 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி ரத்தானால் ஐசிசி மற்றும் ஒளிபரப்பு நிறுவனமான ஜியோஸ்டார் ஆகியவற்றுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும். இந்தப் போட்டியின்போது ஒளிபரப்பப்படும் 10 விநாடி விளம்பரத்தின் மதிப்பு மட்டும் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அசராத இந்தியா

இந்தச் சர்ச்சைகள் ஒருபுறம் நடந்தாலும், இந்திய அணி தனது திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்திய அணி திட்டமிட்டபடி கொழும்புக்குச் செல்லும். அங்குப் பயிற்சியில் ஈடுபடும். போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பிலும் பங்கேற்கும். பிப்ரவரி 15ஆம் தேதி போட்டி நடைபெறும் மைதானத்திற்குச் சரியான நேரத்திற்குச் சென்று, பாகிஸ்தான் அணி வராத பட்சத்தில் போட்டி நடுவரின் முடிவுக்காகக் காத்திருக்கும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

ஐசிசி மற்றும் பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை வெற்றி பெற்று, கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தப் போட்டி நடைபெறுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, February 7, 2026, 19:08 [IST]
Other articles published on Feb 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+