துபாய்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அண்டர் 19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் பந்துவீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை. பாகிஸ்தான் வீரர் சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் குவித்தார்.
முன்னதாக இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மத்ரே சற்றும் யோசிக்காமல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். காலையில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியா திட்டமிட்டு பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் காபா மண் (Gabba soil) கொண்ட ஆடுகளம் பயன்படுத்தப்படுகிறது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வேகம் மற்றும் பவுன்ஸை வாரி வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதே சமயம் பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க ஏதுவான ஆடுகளம் என்று கணிக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு கிஷன் குமார் சிங் வீசிய முதல் சில ஓவர்கள் சவாலாக அமைந்தன. இருப்பினும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஹம்சா ஜஹூர் அதிரடி காட்டினார். வெறும் 14 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் விளாசி மிரட்டினார்.
வேகமாக ஆடிய ஹம்சா ஜஹூரை, இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஹெனில் படேல் தனது அபாரமான பந்துவீச்சில் வீழ்த்தினார். 3.3 ஓவரில் அவர் அடித்த பந்து கேப்டன் ஆயுஷ் மத்ரே கையில் தஞ்சமடைந்தது. பாகிஸ்தான் 31 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. ஆனால், அதன் பின்னரும் பாகிஸ்தான் அணி அதிரடியாக ரன் குவித்தது. சமீர் மின்ஹாஸ் ஒருபுறம் ரன் குவிக்க மற்ற வீரர்கள் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தனர்.
அஹமது ஹுசைன் மட்டுமே தாக்குப் பிடித்து 72 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். உஸ்மான் கான் 35 ரன்கள் எடுத்தார். சமீர் மின்ஹாஸ் 172 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் கிஷன் குமார் சிங் 5 ஓவரில் 50 ரன்களை வாரி வழங்கினார். ஹெனில் படேல் 10 ஓவரில் 62 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். கிலான் படேல் 10 ஓவர்களில் 44 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.தீபேஷ் தேவேந்திரன் 10 ஓவர்களில் 83 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இந்தியா U19:
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிகியான் குண்டு (விக்கெட் கீப்பர்), கனிஷ்க் சௌஹான், ஹெனில் படேல், கிலன் படேல், தீபேஷ் தேவேந்திரன், கிஷன் குமார் சிங்.
பாகிஸ்தான் U19:
ஹம்சா ஜஹூர், சமீர் மின்ஹாஸ், உஸ்மான் கான், அகமது ஹுசைன், ஃபர்ஹான் யூசுப் (கேப்டன்), ஹுசைஃபா அஹ்சன், நிகாப் ஷபிக், முகமது ஷயான், அலி ரசா, அப்துல் சுபான், முகமது சய்யாம்.