IND vs PAK U19: அவசரப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி.. மேட்ச் காலி.. இந்திய அண்டர் 19 அணி படுதோல்வி
துபாய்: ஆசிய கோப்பை அண்டர் 19 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 348 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அண்டர் 19 அணி, பவர்-பிளே ஓவர்கள் கூட முடிவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பாதாளத்தில் விழுந்தது. வைபவ் சூர்யவன்ஷி மட்டும் சற்று நிதானித்து ஆடி இருந்தால் இந்திய அணியின் நிலைமை வேறாக இருந்திருக்கும். ஆனால், இறுதியில் இந்திய அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த இறுதிப் போட்டியில் 348 ரன்கள் சேஸிங் என்றதும், தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியை கையில் எடுத்தார். பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் அலி ரசா வீசிய ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், வெறும் 10 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் விளாசினார்.

ஸ்ட்ரைக் ரேட் 260-ல் மிரட்டிய அவர், இன்னும் கொஞ்சம் நேரம் நிலைத்து நின்றிருக்க வேண்டும். ஆனால், அவசரப்பட்டு மீண்டும் பெரிய ஷாட் ஆட முயன்று அலி ரசா பந்துவீச்சில் ஹம்சா ஜஹூரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வைபவ் விக்கெட் விழுந்தது தான் திருப்புமுனையாக அமைந்தது.
சீட்டுக்கட்டு போல சரிந்த விக்கெட்டுகள்
வைபவ் அவுட்டான பிறகு இந்திய அணியின் டாப் ஆர்டர் அப்படியே ஆட்டம் கண்டது. கேப்டன் ஆயுஷ் மத்ரே 2 ரன்கள் (7 பந்து), ஆரோன் ஜார்ஜ் 16 ரன்கள், விஹான் மல்ஹோத்ரா 7 ரன்கள், வேதாந்த் திரிவேதி 9 ரன்கள் என வரிசையாக வீழ்ந்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் முகமது சய்யாம் மற்றும் அலி ரசா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை நிலைகுலையச் செய்தனர். 9.5 ஓவரில் இந்திய அணி 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. அப்போதே போட்டியின் முடிவு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
அதன் பின் வந்த வீரர்கள் ஓரளவு ரன் குவிக்க முயன்றாலும் விக்கெட் வீழ்ச்சி தொடர்ந்தது. 26.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அண்டர் 19 அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்று அண்டர் 19 ஆசிய கோப்பையை வென்றது.
சமீர் மின்ஹாஸ் சதம்
முன்னதாக டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியாவுக்கு, பாகிஸ்தான் வீரர் சமீர் மின்ஹாஸ் மரண பயத்தை காட்டினார். இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், 113 பந்துகளில் 17 பவுண்டரி, 9 சிக்ஸர்களுடன் 172 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அகமது ஹுசைன் (56) அவருக்கு பக்கபலமாக இருந்தார். இதனால் பாகிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அவரது ஆட்டமே பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications